அக்கரைப்பற்று மத்திய சந்தைப்பிரதேசத்தில் 10பேர் கொரோனா தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்று மேலும் பரிசோதனை

வி.சுகிர்தகுமார்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட அக்கரைப்பற்று மத்திய சந்தைப்பிரதேசத்தில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் பின்னர் 10பேர் கொரோனா தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்று மத்திய சந்தை பிரதேசத்தில் மேலும் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் தெரிவித்தார்.
இதனடிப்படையில் இன்று அக்கரைப்பற்று மத்திய சந்தை பிரதேசத்தில் மக்களின் வருகையினை மட்டுப்படுத்தும் நடவடிக்கையினை மேற்கொண்ட அவர்கள் அங்கு பரிசோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
இதேநேரம் பொலிசார் இராணுவத்தினர் இணைந்து மத்திய சந்தைப்பகுதியில் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளதுடன் மத்திய சந்தைக்குள் நுழையும் வாகனங்களையும் மக்களையும் போக்குவரத்து பொலிசார் கட்டுப்படுத்தியதை அவதானிக்க முடிந்தது.
இந்நிலையில் பிரதேச செயலகங்கள் பிரதேச சபை சுகாதார துறை பொலிசார் உள்ளிட்டவர்கள் மக்களுக்கான அறிவறுத்தல்களை ஒலிபெருக்கி மூலம் வழங்கி வருவதை அவதானிக்க முடிந்தது.
இது இவ்வாறிருக்க பொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் எனும் அச்சத்தில் மக்கள் விற்பனை நிலையங்களை சூழ்ந்து பொருள் கொள்வனவில் ஈடுபட்டுவரும் நிலையில் சில விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன.
எது எவ்வாறாயினும் தகவல் வழங்கப்பட்டு சில மணித்தியாலயங்களில் மத்திய சந்தைப்பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.