அக்கரைப்பற்று, பெரிய பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா…

இலங்காபுரியின் கீழைத்தேசமதில் அருமறைகள் மாட்சி தரும் அக்கரைப்பற்று பெருநகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இயற்கை எழில் கொஞ்சும் கருங்கொடித்தீவு பதிதனில் ஈராயிரம் ஆண்டுகளாக கோயில் கொண்டு தன்னை நாடி வருகின்ற அடியவர்களின் இன்னல்கள் அகற்றி இன்பம் தரும் கருணைக் கடவுளாம் கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையாரின் பிரம்மோற்சவப் பெருவிழா மங்கலகரமான பிலவ வருடம் பங்குனித்திங்கள் 22ம் நாள் (2022.04.05) சதுர்த்தி திதியம் கார்த்திகை நட்சத்திரமும் சித்தாமிர்தமும் கூடிய சுப வேளையில் காலை 10.30மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பித்து தொடர்ந்து 11 நாட்களும் 11 விதமான விஷேட திருவிழாக்கள் நடைபெற்று வந்தது.
அந்தவகையில் கருங்கொடித்தீவுறை பெரிய பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் 11ஆம் நாள் தேர்த்திருவிழா இன்றைய தினம் (15) வெள்ளிக்கிழமை காலை 08.00 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையைடுத்து பிள்ளையார் உள்வீதியுலா காலை 09.00 மணியளவில் தேரில் ஆரோகணித்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகு விமர்சையாக இடம்பெற்றது.
மேலும் நாளை (16) சனிக்கிழமை காலை 07.00 மணியளவில் கடலில் தீர்த்தோற்சவம் மற்றும் திருக்கொடியிறக்கம் என்பனவும் நடைபெற இருக்கின்றது.