ஆலையடிவேம்பு

அக்கரைப்பற்று கோளாவில் பகுதி வீதியின் அவல நிலை! எவருமே கண்டுகொள்ளாத நிலையில் தாங்களே வீதியை செப்பனிட்டு இருக்கிறார்கள் பிரதேச மக்கள்!

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச சபைக்குட்பட்ட கோளாவில் – 03 ஆம் பிரிவு ”சுவேந்திரன் வீதி” சாகாமம் பிரதான வீதியின் கிளை வீதியாக காணப்படுகிறது.

குறித்த வீதியின் ஆரம்ப பகுதி, மிகவும் தாழ்ந்த வீதியாகவும் நீர் வடிந்தோடுவதற்குரிய வசதிகள் இல்லாமையினால் வருடத்தின் பல மாதங்கள் வெள்ள நீர் தேங்கி இருப்பதனால் இவ் வீதியினை தொடர்ச்சியாக பயன்படுத்துகின்ற பாடசாலை மாணவர்கள், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் ஏனையவர்களும் கடந்த பல வருடங்களாக பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.

இது தொடர்பாக சுமார் 07 வருடங்களாக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள், பிரதேச அரசியல்வாதிகள் என பல தரப்பட்டவர்கள் கவனத்திற்கு கொண்டுசென்று இதனை செப்பனிட்டு அல்லது வீதி ஒன்றினை அமைத்துத்தருமாறு பல கோரிக்கைகள் முன்வைத்ததாகவும் மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

275 மீற்றர் நீளம் கொண்ட குறித்த வீதியில் செப்பனிடப்படவேண்டிய பகுதியின் நீளம் அண்ணளவாக 90 மீற்றர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மக்களின் கோரிக்கைகளை எவருமே கண்டுகொள்ளாத நிலையில் குறித்த வீதியில் வசிக்கும் மக்கள் விசனத்திலும் மற்றும் விரத்தியிலும் முன்வந்து அவர்கள் நிதி பங்களிப்பு மற்றும் சிரமதான செயற்பாட்டின் ஊடாக வெள்ளநீரினால் ஏற்படும் இன்னல்கள் மற்றும் அசௌகரியங்களை தவித்துக்கொள்ள இவ் வீதியை போக்குவரத்துக்கு உகந்த பாதையாக தங்களால் முடிந்தவரை செப்பனிட்டு இருக்கிறார்கள்.

கற்கள் இடப்பட்டு மட்டுப்படுத்தி அதன் மேல் மணல் இடப்பட்டு தற்போது அனைவரும் பயன்படுத்தக்கூடிய வீதியாக மாற்றி இருக்கிறார்கள்.

குறித்த பகுதி மக்களின் இந்த செயற்பாட்டை அனைவரும் போற்றுவதுடன் மக்களின் பிரச்சனைகளை கண்டுகொள்ளாதவர்களை வன்மையாக கண்டிக்கிறார்கள்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker