உலகம்

கின்னஸ் சாதனை படைத்த தமிழ் சிறுமி!!

பதினொரு வயது நிரம்பிய செல்வி சங்கவி ரதன் இடுப்பில் வளையம் ஒன்றைச் சுற்றியவாறு றூபிக்கின் கனசதுரத்தின் தனித்தனி நிறங்களை ஒரு கையினால் ஒழுங்குபடுத்தி கின்னஸ் உலகசாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

இவர் ஆகஸ்ட் முதலாம் திகதி கனடா மிஸிஸாகா நகரில் கின்னஸ் சாதனை நிறுவனப் பிரதிநிதிகள் முன்னிலையில் 55 நிமிடங்களில் 30 தடவைகள் 3×3 றூபிக்கின் கனசதுரத்தினை ஒழுங்குபடுத்தி, 25 தடவைகள் என்றிருந்த முன்னைய கின்னஸ் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்.

யாழ், தீவகம் அனலைதீவைச் சேர்ந்த பெற்றோர்களான பாலசிங்கம் ரதன் – வரதராஜன் வசந்தி தம்பதிகளின் இளைய மகளான சங்கவி கொரோனா காலத்திலான முடக்கத்தில் வீட்டில் இருந்த காலத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தி இந்த உலக சாதனையைப் புரிந்துள்ளார்.

புத்தகம் ஒன்றை வாசித்தும் பல காணொளிகளைப் பார்த்தும் இதில் உள்ள நுட்பங்களைக் கற்றுத் தெறிந்து மூன்று மாதங்களாகப் பயிற்சி செய்து இவர் இதனைச் சாத்தியமாக்கியுள்ளார்.

இடுப்பில் வளையம் சுற்றுவதை தனது இளவயதில் கற்றிருந்ததும் சங்கவி இந்தச் சாதனையை நிறைவேற்ற உதவியாக இருந்தது.

புது விடயங்களைக் கற்பதில் ஆர்வமுள்ள சங்கவி இசைக்கருவி வாசித்தல், வாய்ப்பாட்டு, விளையாட்டுக்கள் என்பவற்றில் ஆர்வமாக ஈடுபட்டு வருபவர்.

பிறப்பின்போது ஏற்பட்ட காயம் ஒன்றினால் வலக்கரம் இயங்க முடியாத நிலையிலும் தனது இடக்கரத்தினால் இவர் இந்தச் சாதனையினை மேற்கொண்டு பலருக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கின்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker