ஐ.பி.எல்.: ஹைதராபாத் அணியில் ஜேசன் ஹோல்டர்- அம்பத்தி ராயுடு விளையாடுவது சந்தேகம்!

பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரில், விளையாடி வரும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியில் மேற்கிந்திய தீவுகளின் சகலதுறை வீரர் ஜேசன் ஹோல்டர் இணைந்துள்ளார்.
பெங்களூர் றோயல் செலஞ்சர்ஸ் அணிக்கெதிரான போட்டியில், ஆரோன் ஃபிஞ்ச் அடித்த பந்தை தடுக்க முயன்றபோது ஹைதராபாத் அணியின் மிட்செல் மார்ஷ்க்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து அவருக்குப் பதிலாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் டெஸ்ட் அணியின் தலைவரும், சகலதுறை வீரருமான ஜேசன் ஹோல்டர் ஹைதராபாத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ஹைதராபாத் அணி நிர்வாகம் தனது சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மிட்செல் மார்ஷ் கணுக்கால் காயம் காரணமாக ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகியுள்ளார். அவர் விரைவாக குணமடைய வாழ்த்துகிறோம். அவருக்குப் பதிலாக ஜேசன் ஹோல்டர் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் அணியுடன் இணையவுள்ளார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, காயமடைந்துள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் நடுத்தர துடுப்பாட்ட வரிசை வீரரான அம்பத்தி ராயுடு, நாளை நடைபெறவுள்ள டெல்லி கெபிடல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், ராயுடுவின் உடற்தகுதி முன்னேறினால் நாளைய போட்டியில் விளையாடவும் வாய்ப்புண்டு என சென்னை அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.
காயம் காரணமாக ராஜஸ்தான் அணிக்கு எதிராக விளையாடாத அம்பத்தி ராயுடு, முதல் லீக் போட்டியில், மும்பை அணிக்கு எதிராக 71 ஓட்டங்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
எனினும் ஒக்டோபர் 2ஆம் திகதி சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அம்பத்தி ராயுடு விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல காயம் காரணமாக இதுவரை இந்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாடாத பிராவோ, சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராகக் களமிறங்குவார் என்றும் கூறப்படுகிறது.