இலங்கை

தேர்தல் நாளை நடைபெற்றாலும் நாம் சந்திக்க தயாராகவுள்ளோம் – ஆனாலும் அதற்கு சாத்தியமில்லை : தயா கமகே!

 

வி.சுகிர்தகுமார்

  Covid 19 கொரோணா வைரஸ் தொற்று நோய் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் வழங்கி வருகின்ற 5000 ரூபா கொடுப்பனவை பெற்றுக் கொண்டவர்களின் பெயர் பட்டியலை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமென்று முன்னாள் சமூக வலுவூட்டல் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயா கமகே தெரிவித்தார்.

அரசாங்கமும் கட்சிகளும் தேர்தலுக்கு தயராகின்றது. இந்நிலையில்  மக்கள் அதைப்பற்றி சிந்திக்கவில்லை. இந்த கொரோனா தொற்றிலிருந்து எப்படி மீள்வது. தமது பிள்ளைகளுக்கான உணவை எப்படி வழங்குவது. தமது குழந்தைகளின் கல்வியை எப்படி தொடர்வது என்பதையே சிந்திக்கின்றனர். இந்நிலையில்  தேர்தல் நாளை நடைபெற்றாலும் நாம் சந்திக்க தயாராகவுள்ளோம். ஆனாலும் அதற்கு சாத்தியமில்லை எனவும் தேர்தல் நடைபெறுவதை தேர்தல் ஆணைக்குழுவே தீர்மானிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

முன்னாள் அமைச்சர் தயா கமகே ஏற்பாடு செய்திருந்த அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று மாவட்டத்தின் நகரிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்றது. இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போது,

கொரோணா வைரஸ் தொற்று நோய் காரணமாக தற்போது நாட்டில் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம் என்பன முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 42252 பேருக்கு மட்டுமே வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டிருக்கின்றது. இன்னும் எத்தனை பேர் நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அறிய முடியாமல் உள்ளது. நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் பரிசோதனை செய்ய வேண்டும்.
இதற்கு உதவுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் அரசாங்கத்துடன் பேசினோம். அரசாங்கம் இயந்திரம் மற்றும் தொழில்நுட்பம் பற்றாக்குறையாக உள்ளது என்று தெரிவித்தது. மக்களின் நலன் கருதி கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்வோம் என்று சொன்னபோது அதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. எமது பேச்சுக்களை தட்டிக்கழித்து.

பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன் கருதி தேவையான முன்னெடுப்புக்களை செய்வதற்கு ஜனாதிபதி முன்வரவேண்டும். இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். தற்போது நாட்டில் எலிக்காய்ச்சல் நோயினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் சந்தேகம் உள்ளது.
நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. வர்த்தகர்கள், நடுத்தர வர்த்தகர்கள் சிறுவர்த்தக வியாபாரிகள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸ் நோயானது இனம், மதம், மொழி பார்ப்பதில்லை இதனை தடுப்பதற்கு நாம் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். பொருளாதாரம்  பின்தங்கிய நிலையில் நாடு பின்னோக்கி செல்லும் நிலை உருவாகியுள்ளது.

தற்போது நாட்டில் 61 லட்சம் குடும்பங்கள் வாழ்கின்றனர் இவர்களுள் 16 லட்சம் குடும்பங்கள் அரச ஊழியர்களாக காணப்படுகின்றனர். எனவே மீதமாக 45 லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன ஆனால் அரசாங்கம் 75 லட்சம் பேருக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக சொல்கின்றது. இந்த விடயத்தில் பெரும் ஊழல் இடம்பெற்றிருக்கின்றது இதுதொடர்பாக ஜனாதிபதியோடு பேசி இருக்கின்றோம்.

பரீட்சை பெறுபேறுகளை இணையத்தில் வெளியிட முடியுமென்றால் ஏன் 5000 ரூபா கொடுப்பனவை பெற்றுக் கொண்டவர்களின் பெயர்களை வெளியிட முடியாது. இதனை வெளியிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பலர் இதுவரை தமக்கு 5000 ரூபா கொடுப்பனவு கிடைக்கவில்லை என முறைப்பாடு செய்கின்றனர்.

நாம் ஆட்சியில் இருக்கும் போது, 525000 குடும்பங்களுக்கு சமூர்த்தி உதவிகளை வழங்கினோம் மேலும் 350000 பேருக்கு சமூர்த்தி உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு தயாராக இருந்தோமம். முதியோர்களுக்குரிய கொடுப்பனவுகளை திறைசேரியில் வைத்திருந்தோம் ஆனால் இன்னும் இவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை. இவற்றை பொது மக்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும் என்றும் தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த முன்னாள் பெற்றோலிய வள இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனோமா கமகே தொற்றுநோய் காரணமாக பெண்கள் சிறுவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாடசாலைகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் ஒரு இடத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்னொரு இடத்தில் தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் அரசாங்கம் தேர்தல் ஒன்றை நடத்துவது பற்றி யோசிக்கிறது இது தவறாகும். முதலில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker