இலங்கை

தமிழ் பயங்கரவாதமோ அல்லது இஸ்லாமிய தீவிரவாதமோ தலை தூக்க ஒருபோதும் இடமில்லை …

2015 க்கு முன்பு இருந்த அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளித்தது. 2015 ல் ஆட்சிக்கு வந்தவர்கள் தேசிய பாதுகாப்பை மறந்து விட்டார்கள். எத்தகைய மனித உரிமை குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டாலும், 2015 க்கு முன்பிருந்த பாதுகாப்பு கொள்கை மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அரசாங்கமே பொறுப்பு என்பதை ஜனாதிபதி வலியுறுத்தினார். தமிழ் பிரிவினைவாத பயங்கரவாதத்துக்கோ அல்லது இஸ்லாமிய தீவிரவாதத்துக்கோ எந்த வகையிலும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அடிப்படையற்ற அனைத்து குற்றச்சாட்டுகளையும் முற்றாக நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்று (06) முற்பகல் குருணாகல் மாவட்டத்தில் கிரிபாவ பிரதேச செயலக பிரிவில் உள்ள வேரகல கிராம அதிகாரி பிரிவில் உள்ள மதுராகம விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 13 வது ´கிராமத்துடன் உரையாடல்´ நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

“கிராமத்துடன் உரையாடல்” திட்டம் 2020 செப்டம்பர் 25 அன்று பதுளை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மாத்தளை, இரத்தினபுரி, அனுராதபுரம், அம்பாறை , பொலன்னறுவை, களுத்துறை, மொனராகலை, கேகாலை, கண்டி, புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களை உள்ளடக்கி கடந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதுவரை சரியான கவனம் செலுத்தப்படாத நகரத்திற்கு வெளியே உள்ள தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை விசாரித்து, அச்சந்தர்ப்பத்திலேயே அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்து தீர்வுகளை வழங்குவதே ஜனாதிபதியின் நோக்கமாகும். தீர்ப்பதற்கு காலம் செல்லும் பிரச்சினைகள் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படுவதற்காக குறித்துக்கொள்ளப்படும். கிராம மக்களிடம் சென்று, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அவர்களின் முன்மொழிவுகளில் இருந்து தீர்வுகளைக் காண்பதும் இந்த திட்டத்தின் நோக்கம்.

கிரிபாவ பிரதேச செயலகம் கல்கமுவ நகரிலிருந்து 27 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது, இது வடக்கே அனுராதபுரா மாவட்டம் மற்றும் மேற்கே புத்தளம் மாவட்டத்தை எல்லையாக கொண்டுள்ளது. கிரிபாவ நகர மையத்திலிருந்து வேரகல கிராமத்துக்கான தூரம் 03 கி.மீ. கிரிபாவ பிரதேச செயலக பிரிவில் உள்ள 35 கிராம அதிகாரி பிரிவுகளில் வேரகல மிக வறிய மற்றும் மிகவும் பின்தங்கிய கிராம அதிகாரி பிரிவாக கருதப்படுகிறது.

வேரகல மற்றும் மதுராகம கிராமங்கள் கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்தவை. இளவரசர் சாலிய அசோக மாலாவுடன் வந்து மறைந்திருந்த கிராமம் ஹெங்கோகமவாகவும் பின்னர் அது மதுராகமவாக மாறியது என்று தெரிவிக்கப்படுகிறது. வேரகல ரஜ மகா விஹாரயவின் வரலாறு வலகம்பா மன்னனின் காலம் வரை நீண்டு செல்கிறது. 149 குடும்பங்களைக் கொண்ட வேரகல மற்றும் மதுராகம ஆகிய இரண்டு கிராமங்களின் மக்கள் தொகை 449 ஆகும். நெல், எள்ளு, சோளம், கௌபி, பயறு மற்றும் உளுந்து செய்கை மக்களின் முக்கிய வாழ்வாதாரமாகும்.

´கிராமத்துடன் உரையாடல்´ நிகழ்ச்சியில் பங்கேற்க கிரிபாவ பொது மைதானத்தில் இருந்து மதுராகம மைதானத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்கள், வீதியின் இருபுறமும் கூடியிருந்த மக்களுடன் உரையாடி அப்பிரதேசத்தின் விபரங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தின் படி மின்சார வசதி இல்லாத அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் ´தெயட்ட எலிய´ மின்சார திட்டத்தை நேற்று (06) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கிரிபாவ வேரகல கிராமத்தில் ´கிராமத்துடன் உரையாடல்´ நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக ஆரம்பித்து வைத்தார்.

´தெயட்ட எலிய´ திட்டத்தின் ஊடாக மின்சாரம் இல்லாத அனைத்து சமுர்தி பெறுநர்களுக்கும் மற்றும் சமுர்த்தி உதவிக்கான காத்திருப்பு பட்டியலில் உள்ள குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும்.

மின்சார சபை இலவச மின்சார இணைப்பை வழங்கும். வீட்டிற்கு வயரிங் செய்வதற்காக சமூர்த்தி வங்கி சலுகை வட்டி கடன் வசதிகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அடையாளம் காணப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்க அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

கல்கமுவ யு.பி. வன்னிநாயக வித்தியாலயத்தின் 7 ஆம் வகுப்பு மாணவி திவ்யஞ்சலி எல்வலதெனிய தான் எழுதிய ´கிரி அத்தாகே சிஹினய´ என்ற நூலை ஜனாதிபதியிடம் வழங்கினார்.

“கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சி நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் பாடசாலை நூலக வசதிகளை மேம்படுத்து ஜனாதிபதி அவர்களின் மற்றொரு நோக்கமாகும். “அறிவுப் பலம் கொண்ட சிறுவர் தலைமுறை´ என்ற தலைப்பில் பாடசாலைகளுக்கு ஜனாதிபதி அவர்களினால் புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஒரு பாடசாலைக்கு பல்வேறு பாடத்துறைகளில் 500 புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

கிரிபாவ கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் கம்பள கனிஷ்ட வித்யாலயம் ஆகியவற்றுக்கு மொபிடெல் நிறுவனம் நன்கொடையாக வழங்கிய இரண்டு மடிக்கணினிகளையும், டயலொக் நிறுவனம் நன்கொடையாக வழங்கிய தொலைக்காட்சி தொகுதியையும் ஜனாதிபதி அதிபர்களிடம் ஒப்படைத்தார்.

ராஜங்கனய நீர்த்தேக்கம் மற்றும் உஸ்கல, சியம்பலங்கமுவ குளங்களின் நீரின் மூலம் பிரதேச குளக்கட்டமைப்பை வளப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மக்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

விவசாயத்திற்காக குளம் முறையில் விவசாய கிணறுகளை அமைக்கவும், மதுராகம நீர் திட்டத்திற்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்றை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. சோலே வெவ, சோலேபுர, வீ பொகுன, நிகவெவ, கதுருவெவ மற்றும் மக அந்தரவெவ உள்ளிட்ட அனைத்து குளங்களையும் புதுப்பிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அவர்கள் அறிவுறுத்தினார். கிரிபாவ பகுதியில் குடிநீர் தேவைகளுக்காக 16 நனோ சுத்திகரிப்பு இயந்திரங்களை நிறுவுமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரதேச மக்களுக்கு பிரச்சினையாகவுள்ள காட்டு யானைகள் கிராமத்திற்குள் வரும் பிரச்சினைக்கு தீர்வாக மின்சார யானை வேலியை செயற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

கிரிபாவ கிராம மருத்துவமனை, ராஜங்கனய பெரகும்புர கிராம மருத்துவமனை மற்றும் கல்கமுவ தள வைத்தியசாலை ஆகியவற்றில் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளிடம் கூறினார்.

கிரிபாவ பிரதேச செயலக பிரிவில் 33 வீதிகளில் 105 கி.மீ வீதி வலையமைப்பை விரைவாக அபிவிருத்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

பஹல கிரிபாவ மகா வித்தியாலயம், பொத்தானேகம விஜய கனிஷ்ட வித்தியாலயம், இஹல மரதன்கடவல ஆரம்பப் பாடசாலை, கம்பள கனிஷ்ட வித்தியாலயம், ராஜாங்கனைய அசோகா மாலா நவோதய பாடசாலை, சமுத்ரா மகா வித்தியாலயம் மற்றும் மயிலேவ மகா வித்தியாலயம் உள்ளிட்ட பிரதேச பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கவும், உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கிரிபாவ பிரதேச சபை விளையாட்டரங்கு மற்றும் கிரிபாவ மகா வித்தியாலய விளையாட்டரங்கு ஆகியவற்றின் அபிவிருத்தி பணிகளை (07) ஆரம்பிக்கவும், பிரதேச பாடசாலைகளின் விளையாட்டு மைதானங்கள், பாதுகாப்பு வேலிகள் அமைத்தல் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவதற்கான பணி இராணுவ பொறியியல் சேவைகள் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வேரகல விகாரையிலிருந்து பொத்தானேகமவிற்கு சிசு செரிய பஸ் வண்டியொன்றை திங்கள்கிழமை (08) முதல் சேவையில் ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

பண்ணை விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. ஆய்வுகூட வசதிகளுடன் கால்நடை மருத்துவ அலுவலகமொன்றை நிறுவ வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார். இப்பகுதியில் மேய்ச்சல் நிலங்களின் அபிவிருத்தியையும் விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

பிரதேசத்தின் மின்சாரம், தகவல் தொடர்பு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை விரைவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker