இலங்கை

பிரிந்து நின்று எதையும் சாதிக்க முடியாது: வாக்குறுதிகளை நிறைவேற்ற எதையும் செய்வோம்- சுமந்திரன்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் பெரும்பான்மை பலத்தைப் பெற்ற ஒரே ஒரு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே எனவும் தமிழ் மக்கள் பிரிந்து நின்றால் எதையும் சாதிக்க முடியாது என்றும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்  தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2015 ஆம் ஆண்டு புதிய அரசாங்கத்துடன் சேர்ந்து பயணித்தபோதும் அரசாங்கத்தோடு சேரவில்லை என்று தெரிவித்துள்ள அவர் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் அனைத்தும் தீரும்வரையில் அதைச் செய்யப் போவதுமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு பகுதியில் விசேட செய்தியாளர் சந்திப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற நிலையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தெரிவிக்கையில், ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெற இருக்கின்ற பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரையும் மாவட்டம் வாரியாக சந்தித்து வருகின்றோம்.  அதன்படி  அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை சந்தித்து கலந்துரையாடி இருக்கின்றோம்.

கொரோனா வைரஸ் அனர்த்த  காலத்தில் வித்தியாசமான ஒரு முறையில் தேர்தல் நடைபெறவுள்ளது. எமது வேட்பாளர்களுக்கு பல சுகாதார நிலைமைகள் குறித்து விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

கடந்த 2010ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் நாங்கள் மஹிந்த அரசுடன் என்ன விதமாக செயற்பட்டது என்பது மக்களுக்குத் தெரியும். அந்தக் காலகட்டத்தில்கூட மஹிந்த அரசுடன் பல பேச்சுவார்த்தைகளை நடத்தியமை பலருக்குத் தெரிந்த விடயம்.

மஹிந்த தரப்பினரின் அடக்குமுறைகள், பேச்சுவார்த்தைகள் சாத்தியமற்ற வேளையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தென்னிலங்கையில் இருக்கின்ற முற்போக்கு சக்திகளுடன் இணைந்து ஆட்சிமாற்றத்தைக் கொண்டு வந்தோம்.

2015 ஆம் ஆண்டு புதிய அரசியலில் நாங்கள் சேர்ந்து பயணித்தோம். ஆனால் அரசாங்கத்தோடு சேரவில்லை. எங்களுடைய மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் அனைத்தும் தீரும்வரையில் நாங்கள் அதைச்செய்யப் போவதுமில்லை.

அந்த அரசாங்கத்தின் ஊடாக எமது தமிழ் மக்களுக்கு பல விடயங்களை சாதிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம். அந்த முயற்சிகள் பல கைகூடியிருந்தாலும் சில நிறைவேறவில்லை. விசேடமாக அரசியல் தீர்வுப் பிரச்சினை, புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணியில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தோம். அதன் ஒரு நகல் வரைவு கூட நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருந்தும் அது நிறைவேற்றப்படவில்லை.

ஆனாலும் கல்முனை பிரதேச செயலக தரம் உயர்த்தல் உட்பட பல கைகூடி வந்திருந்தும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் மறுபடியும் ராஜபட்ஷ குடும்பத்தினரிடம் ஆட்சி சென்றிருக்கின்றது.

இன்றைய தினத்தில் அம்பாறை மாவட்ட கல்முனை பிரதேச செயலக தரம் உயர்த்தல் விவகாரம், பிரதேச சபைகள் புதிதாக உருவாக்கும் விவகாரம், எல்லைகள் நிர்ணயம் செய்யும் விடயத்தில் உள்ள சவால்கள், முன்னாள் போராளிகள் தங்களுடைய வாழ்வாதாரப் பிரச்சினை குறித்துப் பேசி இருந்தார்கள். இந்த விடயங்கள் அனைத்திற்கும் நாங்கள் செவிகொடுத்து இருக்கின்றோம்.

எங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் தேர்தல் அறிக்கைகளில் சில விடயங்களைச் சுட்டிக்காட்டுவோம். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு எங்களால் இயன்ற அனைத்து  விடயங்களையும் செய்வோம். வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் பெரும்பான்மை பலத்தைப் பெற்ற ஒரேயொ கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே. இதற்கு தமிழ் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். நாம் பிரிந்து நின்று எதையும் சாதிக்க முடியாது” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker