உலகம்

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அமெரிக்காவிடம் உதவியை நாடும் சீனா

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்
சீனாவின் வுஹான் நகரில் கடந்த December மாத இறுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இப்போது, சீனா முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது.
இன்றைய நிலவரப்படி, சீனாவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 490 ஆக உயர்ந்தது. வைரஸ் தாக்கியதாக உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 24,324 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய புதிய வைத்தியசாலையை 9 நாட்களில் சீனா கட்டி முடித்து திறந்தது. அங்கு தற்போது சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது . 1,500 படுக்கைகள் கொண்ட மற்றொரு வைத்தியசாலை விரைவில் திறக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகவுள்ள நகரங்களுக்கு சீனா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்தவகையில், முக்கிய நகரான ஷங்காய்க்கு 175 Kilo meter தூரத்திலுள்ள தைசூ உள்ளிட்ட நகரங்களில் நேற்று முதல் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டுக்கு ஒருவர் மட்டும் வெளியே செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தனது எதிரி நாடாக கருதும் அமெரிக்காவிடம் சீனா உதவி கோரியும் உள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் கூறியதாவது:-
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு சீனாவுக்கு உதவ அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளதை நாங்கள் அறிவோம். அமெரிக்கா தனது உதவியை வெகுவிரைவில் அளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
அமெரிக்கா இந்த பிரச்சினையை அமைதியாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அணுக வேண்டும். சீனாவை மதித்து, அதனுடன் இணைந்து செயல்பட வேண்டும். மிகைப்படுத்தி செயல்படக்கூடாது.
கொரோனா வைரசை கட்டுப்படுத்த சீன அரசாங்கமும், மக்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த தடுப்பு நடவடிக்கைகள், படிப்படியாக பலனளிக்க ஆரம்பித்துள்ளன. பலர் குணமடைந்து வருகின்றனர். கொரோனோ வைரசுக்கு எதிரான யுத்தத்தில்  சீனா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. எங்களது முயற்சிகளை உலக சுகாதார அமைப்பும், சர்வதேச சமூகமும் அங்கீகரித்துள்ளன என்று அவர் கூறினார்.
இதற்கிடையே, கொரோனா வைரசுக்கு ஹொங்கொங்கில் நேற்று ஒருவர் உயிரிழந்தார். 39 வயதான அவர், சீனாவின் வுஹான் நகருக்கு சென்று விட்டு, அங்கிருந்து கடந்த மாதம் 23ம் திகதி ஹொங்கொங் திரும்பினார். கடுமையான காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று உயிரிழந்தார். கொரோனா வைரசுக்கு சீனாவுக்கு வெளியே உயிரிழப்பு நடந்த 2வது நாடு, ஹொங்கொங் ஆகும்.
தென்கொரிய ராணுவ வீரர்கள் 800 பேர் சமீபத்தில் சீனாவுக்கு சென்று திரும்பினர். அவர்களை தென் கொரிய அரசாங்கம் தற்போதுவரை தனிமைப்படுத்தியே வைத்துள்ளது.
அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், இந்தோனேஷியா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள், சீனர்கள் வருவதற்கு தமது நாட்டில் தடை விதித்துள்ளனர். தங்கள் நாட்டினர் யாரும் சீனாவுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker