மாணிக்கமடு கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப்பொதி- அன்புக்கரங்கள் அமைப்பினர் வழங்கிவைப்பு…

வி.சுகிர்தகுமார்
கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக அம்பாரை மாவட்டத்தின் பின்தங்கிய பல கிராம மக்கள் வாழ்வாதார ரீதியில் பல நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
இவ்வாறு நெருக்கடிகளை சந்தித்துவரும் கிராம மக்களுக்கு அரசாங்கமும் தனியார் தொண்டு நிறுவனங்களும் முடிந்தவரை உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கமைவாக இறக்காமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாணிக்கமடு கிராமத்தில் பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி மக்களுக்கான உலர் உணவுப்பொதிகளை அக்கரைப்பற்று அன்புக்கரங்கள் அமைப்பினர் இன்று வழங்கி வைத்தனர்.
அக்கரைப்பற்றை சேர்ந்த நன்கொடையாளர் ஒருவர் மூலமாகவும் புலம்பெயர் உறவுகளின் மூலமாகவும் கிடைக்கப்பெற்ற நிதியிலிருந்து பெறப்பட்ட உலர் உணவுப்பொதிகளே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.
மாணிக்கமடு மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் முன்பாக சமூக இடைவெளியை பேணும் வகையில் இடம்பெற்ற நிவாரணம் வழங்கும் பணியில் அக்கரைப்பற்று அன்புக்கரங்கள் அமைப்பினர் கலந்து கொண்டு உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்ததுடன் நன்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.