இலங்கை

வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி தரப்பட வேண்டும்  என்கிற குரல் மேலோங்கி ஒலிப்பதற்கு நானேதான் காரணம்- கல்முனையில் கோடீஸ்வரன் முழக்கம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி தரப்பட வேண்டும் என்கிற குரல் இன்று எட்டு திசைகளிலும் ஓங்கி ஒலிப்பதற்கு காரணமாக அமைந்தார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இந்நாள் வேட்பாளருமான கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபை உறுப்பினர் க. சிவலிங்கம் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கல்முனையில் கண்ணகிபுரத்தில் நடத்தப்பட்ட பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோது இவர் மேலும் தெரிவித்தவை வருமாறுகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி பெற வேண்டும் என்கிற விழிப்பு ஐந்து வருடங்களுக்கு முன்னர் எமது தமிழ் மக்களுக்கு பெரிதாக இருந்திருக்கவில்லை. ஆனால் எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவி காலத்தில் அந்த விழிப்பை நான் ஏற்படுத்தி தந்திருக்கின்றேன்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் கட்டாயம் தரம் உயர்த்தி தரப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ச்சியாக பலமாக குரல் கொடுத்து வந்திருக்கின்றேன். அதனால்தான் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை பெறுவதற்கான போராட்டங்கள் மக்கள் மயப்பட்டு பல வழிகளிலும் முடுக்கி விடப்பட்டன.

அதே போல ஒவ்வொரு அரசியல்வாதியையும் இப்பிரச்சினையை தெரிந்து கொள்ள வைத்து இதை செய்ய வேண்டும் என்கிற உணர்வை ஏற்படுத்தி இருக்கின்றேன். மேலும் தேசிய ரீதியாக மாத்திரம் அன்றி சர்வதேச ரீதியாகவும் பேசப்படுகின்ற பிரச்சினையாக இதை மாற்றி கொடுத்திருக்கின்றேன்.

கல்முனை அடங்கலாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழர் பிரதேசங்களில் அதிகளவிலான வேலை திட்டங்களை செய்து தந்திருக்கின்றேன். குறிப்பாக வீதிகளை ஏராளமாக போட்டு தந்திருக்கின்றேன். ஆலயங்களுக்கு ரொக்க நிதிகள் ஒதுக்கி தந்திருக்கின்றேன். குறை வீடுகளை பூரணப்படுத்தி தந்திருக்கின்றேன். கல்முனை பிரதேசத்தில் ஓவ்வொரு வட்டாரத்துக்கும் ஓவ்வொரு கோடி ரூபாய்க்கும் மேல் நிதி வழங்கப்பட்டு உள்ளது.

எமது ஒத்துழைப்புடன்தான் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு 450 மில்லியன் ரூபாய்க்கு மேற்பட்ட செலவில் விபத்து பிரிவு கொண்டு வரப்பட்டு உள்ளது. அதே போல இவ்வைத்தியசாலைக்கு 15 கோடி ரூபாய் பெறுமதியான சி. டி ஸ்கான் இயந்திரம் கொண்டு வரப்பட்டது. அது முஸ்லிம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டபோது தடுத்து நிறுத்தினோம். இம்மாவட்டத்தின் அபிவிருத்தி சார்ந்த விடயங்கள் எதிர்காலத்தில் இன்னமும் சிறப்பாகவும், புரட்சிகரமாகவும் எம்மால் முன்னெடுக்கப்படும்.

பேரினவாத சக்திகளின் அடிவருடியாக இறக்குமதி செய்யப்பட்டு இருப்பவர் கருணா. இவருக்கு வாக்களிக்கும் உரிமைகூட இம்மாவட்டத்தில் கிடையாது. நியமன எம். பியாகவும், பிரதி அமைச்சராகவும் இருந்த இவர் சொந்த மாவட்டமான மட்டக்களப்பில் எந்தவொரு உருப்படியான வேலை திட்டங்களையும் செய்யாதவர். அங்கு முஸ்லிம்களால் தமிழ் மக்களுக்கு அநீதிகள் நேர்ந்தபோதெல்லாம் கண்டும் காணாதவராக கிடந்தவர்.

துன்பப்படுகின்ற அம்மக்களை ஏறெடுத்தும் பார்க்காதவர். இவற்றைத்தான் விடுவோம். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் ஒருமுறைகூட அவர் பேசியதில்லை. அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களால் தமிழர்களுக்கு எதிராக அநீதிகள் நடத்தப்பட்டபோது அவற்றில் ஒன்றைகூட தட்டி கேட்கவில்லை. முள்ளிவாய்க்காலில் தமிழினத்தை அழித்தவர்.

அதற்கான வெகுமதியாகவே நியமன எம். பி பதவியும், பிரதி அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டார். ஆனால் அடிப்படையான தலைமைத்துவ பண்புகள்கூட இல்லாதவர். இப்போது அம்பாறை மாவட்டத்தில் தமிழையும், தமிழ் மக்களையும், தமிழர் பிரதிநிதித்துவத்தையும் அழிப்பதற்காகவே இறக்கப்பட்டு இருக்கின்றார்.

எமது தமிழ் மக்களின் வாக்குகளை சிதைக்கவும், சிதறடிக்கவுமே இறக்குமதி செய்யப்பட்டு உள்ளார். இவரை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் ஏற்கனவே நிராகரித்து விட்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker