இலங்கை

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணி தொடர்பான வழக்கை இடைநிறுத்த கட்டளை- எம்.ஏ.சுமந்திரன்

கல்முனை நீதவான் நீதிமன்றினால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் கலந்து கொண்ட ஏழு பேரின் வழக்கு விசாரணையை இடைநிறுத்தி நீதிவான் கட்டளை பிறப்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

கல்முனை நீதவான் நீதிமன்றினால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் கலந்து கொண்ட ஏழு பேருக்கு ஏப்ரல் மாதம் 30 திகதி ஆஜராகுமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றினால் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்து கொள்வார்கள் என கூறி கல்முனை பொலிஸ் நிலையத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 29 பேருக்கு கல்முனை நீதிமன்ற உத்தரவின் பேரில் தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.

எனினும் பேரணி இடம் பெற்றதுடன் நீதிமன்ற தடை உத்தரவினை மீறி நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டவர்கள் என பெயரிடப்பட்டவர்கள் சிலர் மீறி கலந்து கொண்டதாக குற்றஞ் சாட்டப்பட்டு மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எழுவருக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்கொன்று கல்முனை பொலிஸாரினால் கடந்த 5.02.2021 அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த தவணைகள் கல்முனை நீதவான் ஐ.என் றிஸ்வான் முன்னிலையில் இடம்பெற்றது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணிக்கு நீதிமன்ற தடை உத்தரவினை மீறியுள்ளதாக தொடரப்பட்ட வழக்கினை கல்முனை நீதவான் நீதிமன்றம் தொடர்ந்து நடார்த்தவும் அதன் மீது கட்டளை பிறப்பிக்கவும் மே 18 ஆம் திகதி வரை கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து கட்டளை பிறப்பித்துள்ளது.

இப்பேரணிக்கு தடை விதித்த நிலையில் பேரணியில் பங்குகொண்டு நீதிமன்றை அவமதித்தனர் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு இன்று ( வெள்ளிக்கிழமை )கல்முனை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் நேற்றைய தினம் எதிராக ஆட்சேபனை மனுவினை கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் நிரான் அங்கிற்றல் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன் வைத்தனர். இதனை ஏற்ற மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான அர்ச்சுனா ஒபயசேகர மாயதுன்ன கொரய ஆகியோர் மேற்படி கட்டளையை வழங்கினர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணை செய்யும் நியாயாதிக்கம் நீதவான் நீதிமன்றிற்கு கிடையாது ஆகவே கல்முனை நீதவான் நீதிமன்றில் இன்று இடம்பெற்ற வழக்கினை தடை செய்யக்கோரி முன் வைக்கப்பட்ட சமர்ப்பணத்தை ஏற்ற நீதிமன்றம் எதிர் வரும் 18ஆம் திகதி வரை இடைக்கால தடை விதித்ததோடு எதிராளிகளுக்கான அறிவித்தலை வழங்குமாறும் மேன் முறையீட்டு நீதிமன்ற பதிவாளர் கல்முனை நீதவான் நீநிமன்றின் பதிவாளருக்கு இந்த கட்டளையை தொலை நகல் மூலமும் அனுப்பி வைக்குமாறும் கட்டளையிடப்பட்டதோடு இந்த வழக்குத் தொடர்பில் கல்முனை நீதவான் நீநிமன்றம் இதற்கு மேல் எந்த உத்தரவும் வழங்க கூடாது எனவும் கட்டளையிடப்பட்டது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியை தடுக்க கோரி பெப்ரவரி 2ம் திகதி பின்னேரம் கல்முனை பொலிஸ் கோரியிருந்த தடையுத்தரவுக்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் பொதுமக்களுக்கு உயிர் அல்லது சுகாதாரத்திற்கு பாதிப்பில்லாதவாறு பேரணி செல்பவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்ற உத்தரவுதான் பொலிஸாருக்கு கொடுக்கப்பட்ட நிலையில் இன்று வழக்கு விசாரணை நீதிவான் நீதிமன்ற நீதிபதி வை.எம்.எம் றியால் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது பிரதிவாதிகள் தரப்பினர் வழக்கை மீளப் பெறுமாறு மன்றிற்கு சமர்ப்பணம் விடுத்த போது நீதிவான் பொலிஸாரிடம் வழக்கை மீளப்பெறுவீர்களா என கேட்டார்.அதற்கு பொலிஸ் தரப்பினர் மேலிடத்து உத்தரவின் பிரகாரமே வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும் எனவே அதே மேலிடத்திலிருந்து அனுமதி பெற வேண்டும் என தெரிவித்த நிலையில் குறித்த வழக்கு முற்றாக இடைநிறுத்த நீதிவான் கட்டளை பிறப்பித்துள்ளார்.இவ்விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனும் ஊடகங்களுக்கு கருத்துக்களை முன்வைக்கின்ற போது சுட்டிக்காட்டினார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோ.கருணாகரம் ,த.கலையரசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன் ,மாணவர் மீட்பு பேரவை தலைவர் செ.கணேஷ் , இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணைச் செயலாளர் அ.நிதான்சன், ஆகியோரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆந் திகதி மன்றில் ஆஜராகுமாறு கல்முனை நீதவான் அழைப்பாணை பிறப்பித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker