சீனாவில் தீவிரமாக பரவிவரும் புதிரான வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

சீனாவில் தீவிரமாக பரவிவரும் புதிரான வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, சீனத் தேசிய உடல்நல ஆணையகம் தெரிவித்துள்ளது.
அறிவியலில் முன்பு அறியப்படாத புதிரான வைரஸ் வகையொன்று சீனாவில் வேகமாக பரவி வருகின்றது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு மொத்தமாக 170 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதுவரை 3 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் 4ஆவதாக ஒருவர் உயிரிழந்ததாக வுஹான் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் தீவிர நுரையீரல் நோயை உருவாக்கி வருகிறது.
கொரோனா வைரஸ் என சந்தேகிக்கப்படும் இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சீனத் தேசிய உடல்நல ஆணையத்தின் உயர்நிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சீனத் தேசிய உடல்நல ஆணையத்தின் உயர்நிலை நிபுணர்கள் குழு கூறுகையில், ‘இந்த வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் நம்பிக்கை கொள்வதாகவும், 17 ஆண்டுகளுக்கு முன் சார்ஸ் வைரஸ் பெருமளவில் பரவியது போன்ற நிலைமை தற்போது ஏற்படாது’ என தெரிவித்துள்ளது.
இந்த புதிய ரக வைரஸைப் பிரித்து மரபணு வரிசையை உறுதிப்படுத்தும் பணியை இந்த நிபுணர்கள் குழு ஏற்கனவே நிறைவேற்றியுள்ளது. மருத்துவப் பணியாளர்கள் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் பணியில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.