புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிவைத்தார் பிரதமர்


டெல்லியில் பிரமாண்டமாக அமையவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) அடிக்கல் நாட்டினார்.
டெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டடம் 100 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. இதையொட்டி அதன் அருகே புதிய கட்டடத்தைக் கட்டுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
971 கோடி ரூபா செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்கு முன்பு புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டுவதற்கான பணியில் மத்திய அரசு மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.
4 தளங்களுடன் அமையவுள்ள புதிய கட்டடத்தில் மக்களவை உறுப்பினர்கள் 888 பேர் இருக்கும் வகையில் இருக்கைகளும், மேல்சபை உறுப்பினர்கள் 384 பேர் இருக்கும் வகையில் இருக்கைகளும் அமைக்கப்படுகிறன.
இதேபோல பல்வேறு தொழில்நுட்ப வசதிகளும், நவீன வசதிகளும் அமைக்கப்படுகிறது. இந்த கட்டடம் நிலநடுக்கத்தால் பாதிக்காத வகையிலும் கட்டப்படுகிறது.
இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மாநில முதலமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு நாடுகளின் தூதுவர்கள் கலந்துகொண்டனர்.
புதிய நாடாளுமன்றம் கட்டுவதில் விதிமீறல்கள் இருப்பதாகவும் அதனை நிறுத்த வேண்டும் என்றும் கோரி பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன.
இதனை விசாரித்த நீதிமன்றம் அடிக்கல் நாட்டு விழாவிற்கு மாத்திரம் தற்சமயம் அனுமதி வழங்கியுள்ளதுடன், கட்டுமானப் பணிகள் நடைபெறக்கூடாது என்று இடைக்கால தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



