கல்முனை கொவிட் -19 கட்டுப்பாட்டு செயலணியினால் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

கொரோனா நோயினை கட்டுப்படுத்தும் முகமாக உருவாக்கப்பட்டுள்ள கொவிட் 19 கட்டுப்பாட்டு செயலணி கல்முனை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றினை விடுத்துள்ளது.
குறித்த கொவிட் 19 கட்டுப்பாட்டு செயலணி மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘கல்முனை செயிலான் வீதி தொடக்கம் சாஹிறா கல்லூரி வீதி வரையிலுள்ள சகல வர்த்தக நிலையங்களும் தினமும் மறு அறிவித்தல் வரை மாலை 6.00 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மூடப்படல் வேண்டும்.
மேலும், இப்பிரதேசத்தில் தினமும் மாலை 6.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணி வரை பொதுமக்கள் வெளியில் நடமாடுவது முற்றாக தடை செய்யப்படுகின்றது. அவசர வைத்தியத் தேவைகளுக்காக மட்டும் பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளிவர அனுமதிக்கப்படுவார்கள் .
அத்துடன், இப்பிரதேசத்தில் பிற்பகல் 6.00 மணிக்குப் பின்னர் வைத்தியசாலைகளும் பாமஸிகளும் மட்டுமே திறக்கப்பட அனுமதியளிக்கப்படும் .
எல்லா நேரங்களிலும் சுகாதாரத் துறையினரினால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து சுகாதார நடவடிக்கைகளும் கட்டாயமாக பின்பற்றப்படல் வேண்டும் .
இவ்வறிவித்தலை மீறி செயற்படுவோருக்கு பாதுகாப்புப் படையினர் மற்றும் சுகாதாரத்துறையினரின் பங்களிப்புடன் உடனடியாக கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு, மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் .
மேற்குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளும் மூடப்பட்டிருக்கும் செயிலான் வீதி வரையிலான பகுதிகளை விரைவாக மீட்பதற்காகவும் ஏனைய பகுதிகள் முடக்கம் செய்யப்படாமல் பாதுகாப்பதற்காகவும் என்பதனால் இந்த அவசர நடவடிக்கைகளுக்கு பொதுமக்களாகிய நீங்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்’ என அச்செயலனி கோரியுள்ளது.