இயற்கையினை பாதுகாத்தல் மனிதர்களின் வாழ்வியலின் பொறுப்பு – கண்டல் தாவர மரங்கள் நடும் நிகழ்வில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன்

வி.சுகிர்தகுமார்
கண்டல் தாவர அழிவினால் களப்பு பிரதேசங்கள் அழிவடைந்து செல்வதுடன் களப்பில் உருவாகும் மீன் இறால் நண்டு போன்றவற்றின் பெருக்கமும் குறைவடைந்து வருகின்றது.
இதனை உணர்ந்த அரசாங்கமும் சூழலை பாதுகாக்கும் அமைப்புக்களும் களப்பினை பாதுகாக்கும் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
இதற்கமைவாக அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள பெரிய களப்பு கரையோரப் பிரதேசத்தில் கண்டல் தாவர மரங்கள் நடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சர்வதேச சூழல் வாரத்தினை முன்னிட்டு சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் அமைப்பின் தலைவர் கே.முத்துலிங்கம் தலைமையில் திருக்கோவில் பிரதேசத்தில் தம்பிலுவில் களுதாவளைப் சிவலிங்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தவிசாளர் இ.வி.கமலராஜன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதீசேகரன் சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பின் பணிப்பாளர் கே.நடராஜா அமைப்பின் மாவட்ட உத்தியோகத்தர்கள் இ.ஜெயசிலி எஸ்.ராஜா மற்றும் தம்பிலுவில் கமநல சேவை திணைக்களத்தின் அதிகாரிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கண்டல் தாவரத்தின் பயன்கள் பற்றி அமைப்பின் தலைவரினால் மக்களுக்கு தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டதுடன் கண்டல் தாவரங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு தம்பிலுவில் பெரிய களப்பில் வைபவ ரீதியாக நடும் பணிகள் இடம்பெற்றன.
இதன்போது உரையாற்றிய திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் இயற்கையினை பாதுகாத்தல் மனிதர்களின் வாழ்வியலின் பொறுப்பு என்றும் தவறுகின்ற இடத்தில் இயற்கையின் சீற்றங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் எனவும் கூறினார். மேலும் சட்டத்தால் அனைத்து விடயங்களையும் ஒழுங்குபடுத்த முடியாது என்றும் இதனை உணர்ந்து மனிதர்கள் செயற்பட வேண்டும் என்றும் தனது உரையின் ஊடாக கோரிக்கை விடுத்தார்.









