பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைதாவோருக்கு புனர்வாழ்வளிக்கலாம் என கோட்டாபய கையெழுத்திட்டு வெளியானது விஷேட வர்த்தமானி


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கையெழுத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளது.
அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்ட அறிவித்தலுக்கமைய,
மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக கைதுசெய்யப்படும் சந்தேக நபரை 24 மணித்தியாலங்களுக்குள் அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.
அதனைத் தொடர்ந்து அந்த நபர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு முன் அந்த விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
குறித்த சந்தேகநபர் மத அடிப்படைவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால் அது தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவுறுத்த வேண்டும்.
இதன்படி, அந்த நபரை புனர்வாழ்வளிப்பதற்கு சட்டமா அதிபர் தீர்மானித்தால் அந்த உத்தரவுக்கான எழுத்து மூலமான ஆவணத்துடன் சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.
இதன்போது நீதிவானால் சந்தேக நபரை ஒருவருடத்துக்கு உட்பட்ட காலத்துக்கு புனர்வாழ்வளிக்க உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சந்தேக நபரின் குற்றத்துக்கான வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும் எனவும் குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.