நிஸ்ஸங்க 68 ஓட்டம்; நான்கு விக்கெட்டுகளால் ஹொங்கொங்கை வீழ்த்திய இலங்கை

2025 ஆசியக் கிண்ணத் தொடரில் நேற்றிரவு (15) நடந்த போட்டியில் இலங்கை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹொங்கொங்கை தோற்கடித்தது.
போட்டியில் பத்தும் நிஸ்ஸங்க 44 பந்துகளில் 68 ஓட்டங்களையும், வனிந்து ஹசரங்க 09 பந்துகளில் 20 ஓட்டங்களையும் எடுத்தது தொடரில் இரண்டாவது வெற்றியை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்தது.
டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி நேற்றிரவு 08.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை களத்தடுப்பினை மேற்கொள்வதற்கு தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பாட்டம் செய்த ஹொங்கொங் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்களை எடுத்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஜீஷன் அலி (23) மற்றும் அன்ஷுமன் ராத் (48) ஆகியோர் அந்த அணிக்கு நல்லதொரு தொடக்கத்தை பெற்றுக் கொடுத்தனர்.
பின்னர் வந்த நிஜாகத் கானும் ஆட்டமிழக்காமல் 38 பந்துகளில் 52 ஓட்டங்களை எடுத்தார்.
இதனால், அனுபவம் குறைந்த ஹொங்கொங் அணியானது கெளரவமான இலக்கினை இலங்கைக்கு நிர்ணயித்தது.
பின்னர், 150 என்ற இலக்கை துரத்திய இலங்கை அணி, நிஸ்ஸங்கவின் அதிரடியான ஆட்டத்தின் மூலமாக இலகுவாக ஹெங்கொங்கை வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், அவரின் ஆட்டமிழப்புடன், ஹொங்கொங் அணி, இலங்கையின் நடுத்தர துடுப்பாட்ட வீரர்களை பலவீனப்படுத்தியதன் மூலம் மீண்டும் எழுச்சி பெற்றது.
எனினும், பின்னர் ஹசரங்கவின் சிறந்த துடுப்பாட்டம் ஏழு பந்துகள் மீதமிருந்த நிலையில் இலங்கைக்கு வெற்றியை ஈட்ட உதவியது.
இதனிடையே ஹொங்கொங் அணி, ஆறு பிடியொடுக்கும் வாய்ப்புகளை தவறவிட்டது.
இதனால், இலங்கையுடன் அழுத்தத்திற்கு மத்தியில் விளையாடி அவர்களுக்கு இதுவொரு மறக்க முடியாத போட்டியாக அமைந்தது.
போட்டியின் ஆட்டநாயகனாக பத்தும் நிஸ்ஸங்க தெரிவானார்.