டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வலியுறுத்தி யாழிலுள்ள ஈ.பி.டி.பி கட்சி அலுவலகத்தின் முன்பாக இன்று காலை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க இணைப்பாளர் தாக்கப்பட்டது, மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தொடர்பிருப்பதாக தெரிவித்து, அவரை கைது செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
அதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களின் பதாகைகளை ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் சிலர் பறிக்க முற்பட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.
அத்துடன் அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் உறவுகள் ஈடுபட்டிருந்த வேளை அதீத சத்தத்துடன் அலுவலகத்தினுள் இருந்து பாடல்களை ஒலிக்க விட்டு, ஆர்ப்பாட்டத்தை குழப்பும் நடவடிக்கையில் ஈ.பி.டி.பி.யினர் ஈடுபட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.