நாட்டில் போதைப் பொருளுக்கு அடிமையானோர் எண்ணிக்கை: அதிர்ச்சியளிக்கும் தகவல்!


நாடளாவிய ரீதியில், பல்வேறு போதைப் பொருட்களுக்கு அடிமையான ஐந்து இலட்சத்து 33ஆயிரத்து 883 பேர் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் முன்னெடுத்துள்ள விசேட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கான செயலமர்வில் வெளிப்படுத்தப்பட்டது.
பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் அபாயகரமான ஒளதங்கள் கட்டுப்பாட்டு சபை ஆகியவற்றின் தகவல்களின் பிரகாரம், கடந்த 2019ஆம் ஆண்டு மட்டும் போதைப் பொருள் குற்றங்களுக்காக மொத்தமாக 89 ஆயிரத்து 321பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவருடத்தில் இலங்கையில் மொத்தமாக ஆயிரத்து 741.992 கிலோ ஹெரோயிள் போதைப்பொருளும் ஏழாயிரத்து 71.094 கிலோ கஞ்சாவும், 10.840 கிலோ கொக்கைனும் 15.163 கிலோ ஹஷீஸும், 35.446 கிலோ ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, குறித்த போதைப் பொருட்களுடன் தொடர்புடையதாக கைதுசெய்யப்பட்ட 89 ஆயிரத்து 321 சந்தேகநபர்களில் 45 ஆயிரத்து 923 பேர் கஞ்சா போதைப் பொருள் தொடர்பிலான குற்றங்களுக்காக கைதாகியுள்ளனர்.
அதேபோல், 40 ஆயிரத்து 970 பேர் ஹெரோயினுடன் தொடர்புடைய குற்றங்களுக்காகவும் இரண்டாயிரத்து 73 பேர் ஐஸ் அல்லது மெதம்பிட்டமைன் போதைப் பொருள் குறித்த குற்றங்களுக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கடந்த வருடத்தில் கொழும்பு நகரிலேயே அதிக போதைப் பொருள் பயன்பாட்டாளர்கள் மற்றும் அதுசார்ந்த குற்றங்களில் ஈடுபடுவோர் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, கடந்த 2019இல் 15 ஆயிரத்து 941 பேர் ஹெரோயினுடனும், 13 ஆயிரத்து 134 பேர் கஞ்சாவுடனும், 27 பேர் கொக்கைனுடனும், 67 பேர் ஹஷீஸுடனும் ஆயிரத்து 566 பேர் ஐஸ் போதைப் பொருளுடனும் கொழும்பில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
 
				 
					


