ரி-20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த வருடத்திற்கு ஒத்திப்போக வாய்ப்பு!

ரி-20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த வருடத்திற்கு ஒத்திப்போக வாய்ப்புள்ளதாக, நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பிரெண்டன் மெக்கலம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள மெக்கல்லம், ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் நடைபெறுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ”ஐபிஎல் தொடரை எப்படியும் ஒக்டோபர் மாதம் நடத்த முயற்சி செய்வார்கள். அதனால் ரி-20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த வருடத்திற்கு ஒத்திப்போக வாய்ப்புள்ளது.
ஐ.பி.எல். தொடர் நடைபெறாவிடில் வீரர்களுக்கும், ஊழியர்களுக்கும் சம்பளம் கிடைக்காது. பெண்கள் உலக கிண்ண தொடரும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. ஆனால், மூன்று தொடர்களையும் நடத்துவதற்கான வாய்ப்பை பார்க்க வேண்டும்.
அவுஸ்ரேலியா 16 சர்வதேச அணிகளையும், அணிகளின் ஊழியர்களையும், ஒளிபரப்பு செய்பவர்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக இருக்கப் போகிறது. ரி-20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் யாருமில்லாமல் மூடிய மைதானத்திற்கு நடக்கும் என்பதை என்னால் பார்க்க முடியவில்லை.
2021ஆம் ஆண்டு ஜனவரிக்கு பிறகு போட்டிகளை நடத்த அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இதனால் ஐ.பி.எல். போட்டிக்கான வாய்ப்பை ஒக்டோபர் – நவம்பரில் ஏற்படுத்த முடியும். சில வெளிநாட்டு வீரர்கள் இந்தியா செல்ல முடியும். ஒளிபரப்பு செய்யும் நிறுவனம் இந்தியாவில்தான் உள்ளது. இதனால் ஒருங்கிணைக்க எளிதாக இருக்கும்.
ஐ.சி.சி. மற்றும் உலக கிரிக்கெட்டிற்கு இரசிகர்கள் கூட்டம் தேவை. ஆனால் இந்தியாவுக்கு இரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்த முடியும்” என கூறினார்.
அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி முதல் நவம்பர் 15ஆம் திகதி முதல் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



