பிபிசியிலிருந்து 450 பணியாளர்கள் குறைக்கப்படவுள்ளனர்

2022 ஆம் ஆண்டில் 80 மில்லியன் பவுண்ட்ஸ் செலவினத்தைக் குறைக்கும் திட்டத்தின் கீழ் பிபிசி செய்திப் பிரிவிலிருந்து 450 பணியாளர்கள் குறைக்கப்படவுள்ளனர்.
பிபிசி 2 நியூஸ்நைற், பிபிசி ரேடியோ 5 மற்றும் உலக சேவை ஆகியன பணியாளர் குறைப்பினால் பாதிக்கப்படவுள்ளன என்று கூறப்படுகின்றது.
இன்று புதன்கிழமை, பிபிசி செய்திப் பிரிவிலிருந்து 450 பணியாளர்கள் குறைக்கப்படவுள்ளனர் என அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னர் பிபிசி 2 விக்ரோரியா டார்பிஷைர் திட்டம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
பிபிசி பணிப்பாளர் ஃபிரான் அன்ஸ்வேர்த் (Fran Unsworth) தெரிவிக்கையில்; பாரம்பரிய ஒளிபரப்பிலிருந்து விலகி டிஜிற்றலை நோக்கி நாம் செல்ல வேண்டும் என்று கூறினார்.
மேலும் பிபிசி பார்வையாளர்கள் எமது ஊடகத்தைப் பயன்படுத்தும் விதத்தை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கு கணிசமான பணத்தை மிச்சப்படுத்தும் வகையில் பிபிசி செய்திகளை மாற்றியமைக்க வேண்டும். எனவே நாம் டிஜிற்றலை நோக்கி எமது ஊடகத்தைக் கொண்டு செல்லவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
ஆனால் ஒளிபரப்புத் துறையின் தொழிற்சங்கம் (Bectu) கூறுகையில்; இந்த மாற்றங்கள் ஊழியர்களை இன்னும் அதிக அழுத்தத்தின் கீழ் வைத்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
பிபிசி செய்திப்பிரிவில் தற்போது சுமார் 6,000 பேர் பணியாற்றுகின்றனர். பிரித்தானியாவுக்கு வெளியே 1,700 பேர் பணியாற்றுகின்றனர்.
தற்போது மேற்கொள்ளப்படும் மாற்றங்களுக்குப் பின்னர் பிபிசி செய்திப்பிரிவின் வருடாந்தச் செலவீனம் 480 மில்லியன் பவுண்ட்ஸாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.