இலங்கை
சிங்கள மக்களிடம் தமது தமிழ் மக்களின் கடந்தகால சூழலை மீண்டும் நினைவுபடுத்த முனையும் புதிய அரசாங்கம்- சம்பிக்க கேள்வி

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்
தமிழர்களின் கடந்தகால சூழலை மீண்டும் நினைவுபடுத்தவா தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதை ராஜபக்ச அரசாங்கம் தடுக்கின்றது என ஐக்கிய தேசிய முன்னணியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்துடன் இன்று இனவாத கருத்துக்களை மட்டுமே அரசாங்கம் பரப்பி வருகிறது. சகல மக்களும் ஒன்றாக வாழக்கூடிய சூழலை நாம் அமைத்துக் கொடுத்தோம். ஆனால் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் இனவாத அரசியலையே செய்ய ஆரம்பித்துள்ளனர். நாட்டின் சுதந்திர தினம் நாளை மறுதினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழ் மொழியில் தேசியகீதம் பாடப்பட கூடாது என அறிவித்துள்ளனர்.

ஆனால் எமது ஆட்சியில் அவ்வாறு எந்தவொரு தடையையும் நாம் தமிழ் , முஸ்லிம் மக்களுக்கு எதிராக செய்யவில்லை. சிங்கள மக்களும் அவ்வாறு தனித்துவமான நிலைமையை எதிர்பார்க்கவும் இல்லை. நாம் சிங்கள , தமிழ் மக்களின் நெருக்கமாக்கும் நடவடிக்கையையே முன்னெடுத்தோம். ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ், சிங்கள மக்களை தூரமாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்க வேண்டாம் என அரசாங்கம் கூறுகின்றது என்றால் அது வெறுமனே தமது வெற்றியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள சிங்களவர்களை தம்வசம் வைத்திருக்க செய்யும் சூழ்ச்சியாகவே நாம் கருதுகின்றோம் என்றும் அவர் கூறினார்.



