தலைமறைவாக இருந்த குற்றவாளி 28 ஆண்டுகளின் பின்னர் கைது

கென்ற், மெய்ட்ஸ்ரன் சிறையில் இருந்து 1992 ஆம் ஆண்டு தப்பி ஓடிய குற்றவாளி மீண்டும் கைதாகியுள்ளார்.

சார்ள்ஸ் லின்ச் (Charles Lynch) என்ற நபர், தனது மோட்டர் படகில் ஆங்கிலக் கால்வாயினூடாக சட்டவிரோதக் குடியேறியவர்களை ஏற்றிவந்த நிலையில் எல்லைப் படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
போர்ட்ஸ்மவுத் கிரவுன் நீதிமன்றுக்குக் கொண்டுவரப்பட்ட சார்ள்ஸ் லின்சுக்கு 44 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நொவெம்பர் 6 ஆம் திகதி இரண்டு எல்லை படைக் கப்பல்களும் கடலோரக் காவல்படையின் ஹெலிகொப்ரரும் இணைத்து விரட்டிப்பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டன. இறுதியில் ஆங்கிலக் கால்வாயின் சில மைல் தொலைவில் சார்ள்ஸ் லின்சின் மோட்டர் படகு கைப்பற்றப்பட்டது.
படகின் உள்ளே ஐந்து ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட எட்டு அல்பேனியக் குடியேறிகள் காணப்பட்டனர். அவர்களின் சட்டவிரோதக் குடியேற்றத்திற்கு தான் உதவியதாக சார்ள்ஸ் லின்ச் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
ஆரம்பத்தில், லிஞ்ச் எல்லைப்படை அதிகாரிகளிடம் தான் ஒரு ஜேர்மன் நாட்டவர் என்று கூறினார். எனினும் மேலதிக விசாரணைகள் மூலம் அவர் ஒரு தண்டனை பெற்ற கைதி என்பது தெரியவந்தது.
அவர் 1992 இல் கென்ற், மெய்ட்ஸ்ரன் சிறையில் இருந்து தப்பித்து தலைமறைவாக இருந்த சார்ள்ஸ் லின்ச் எனக் கண்டறியப்பட்டார்.



