டெல்லி குண்டு வெடிப்பில் 13 பேர் பலி – கார் உரிமையாளர் கைது!

புதுடெல்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலையில் சாலையில் சென்ற கார் பலத்த சப்தத்துடன் வெடித்து சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர்.
வெடிவிபத்து ஏற்பட்ட “ஹுண்டாய் ஐ-20′ காரின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இது பயங்கரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
அவர்களின் புலனாய்வுக்கு தேசிய பாதுகாப்புப்படையினரும் தேசிய புலனாய்வு அதிகாரிகளும் உதவி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்திய தலைநகர் டில்லி உள்பட நாடு முழுவதும் உச்சபட்ச பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டில்லியில் நெரிசல் மிக்க செங்கோட்டைப் பகுதியிலிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் உள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே திங்கள்கிழமை இரவு 7 மணி அளவில் மெதுவாக சென்ற கார் பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. அந்தக் காரில் பயணிகள் இருந்ததாகவும், கார் வெடித்ததில் அருகில் இருந்த வாகனங்களும் கடும் சேதமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் இடத்துக்கு 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று இரவு 7.29 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், ஆறு கார்கள், இரண்டு ரிக்ஷாக்கள், ஒரு ஆட்டோவும் தீயில் எரிந்து நாசமாகியதாகவும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
வெடிப்பு நடந்த இடத்தில் உடல் பாகங்கள் சிதறிக் கிடப்பதை கண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
விசாரணை: சம்பவ பகுதியில் தேசிய புலனாய்வு முகமையின் (என்.ஐ.ஏ) குழுவினர் விசாரணை நடத்தினர். தேசிய பாதுகாப்புப் படையினரும் சம்பவ பகுதியில் இருந்து மாதிரிகளை சேகரித்துச் சென்றனர். தடயவியல் நிபுணர்கள் தனியாக சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். காவல் துறையின் சிறப்புப்பிரிவினர் இறந்தவர்களை அடையாளம் காணும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல் ஆணையர் ஆய்வு: இந்நிலையில், டில்லி காவல்துறை ஆணையர் சதீஷ் கோல்ச்சா சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சருடன் உடனுக்குடன் தகவல் பகிர்ந்து வருகிறோம். கார் வெடிக்கும் முன்பாக சிக்னலில் மெதுவாக அது நகர்ந்து கொண்டிருந்தபோது வெடித்ததாக தெரிய வந்துள்ளது. இது கார் வெடிகுண்டு தாக்குதலா என இப்போதைய சூழலில் தெரிவிக்க இயலாது’ என்றார்.
இந்தச் சம்பவத்தில் நெற்றிப்பகுதியில் காயமடைந்த ஒருவர் கூறுகையில், “எனது ஆட்டோவின் முன் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. அது திடீரென வெடித்தது’ என்றார்.
பலத்த பாதுகாப்பு:
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து டெல்லியில் விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லியை அடுத்த ஹரியாணாவின் ஃபரீதாபாதில் காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவரின் வீட்டில் சுமார் 360 கிலோ அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் மற்றும் ஆயுதங்கள் திங்கள்கிழமை காலையில் கண்டுபிடிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு தில்லி செங்கோட்டை அருகே இந்த கார் வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. ஆனால், இரண்டு சம்பவங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளனவா? என்பதை கூற முடியாது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிரதமர் இரங்கல்
அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சர் உத்தரவு:
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கார் வெடிப்பு சம்பவ நிலவரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசினார். இதையடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் அமித் ஷா வெளியிட்டுள்ள காணொளியில் சம்பவம் குறித்து விரிவாக விளக்கினார்.
சம்பவ பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் புலனாய்வைத் தீவிரப்படுத்தவும் அனைத்து கோணங்களில் விசாரணை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் அமித் ஷா ஆய்வு:
கார் வெடிவிபத்து நிகழ்ந்த செங்கோட்டை பகுதியில் ஆய்வு செய்த மத்திய அமைச்சர் அமித் ஷா, எல்.என்.ஜேபி மருத்துவமனைக்கு சென்று சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் மருத்துவர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பயங்கரவாதத் தாக்குதலா?
இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்களின் உடலில் பெல்லட் என்ற சிறிய குண்டுகள் அல்லது சக்தி வாய்ந்த குண்டு வெடிப்புக்கான பாதிப்புகள் இல்லாததாலும், சம்பவ இடத்தில் குண்டு வெடிப்புக்கான வயர்கள் தற்போது வரை கிடைக்காததாலும் இது குண்டுவெடிப்பு சம்பவமாக உடனடியாக உறுதி செய்யப்படவில்லை என்று டில்லி காவல் துறை மூத்த அதிகாரி தெரிவித்தார். இந்தச் சம்பவத்துக்கு எந்தவித பயங்கரவாத அமைப்பும் இதுவரையில் பொறுப்பேற்கவில்லை.
எனினும், அனைத்து கோணங்களிலும் மத்திய புலனாய்வு அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் உரிமையாளர் கைது
வெடிவிபத்து ஏற்பட்ட “ஹுண்டாய் ஐ-20′ காரின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
முன்னதாக, சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், “வெடிப்பு நிகழ்ந்த கார் ஹரியாணா மாநிலத்தின் பதிவெண் கொண்டிருந்தது. காரின் உள்ளே மூன்று பயணிகள் இருந்தனர்’ என்று தெரிவித்தார். இதையொட்டி, சல்மான் என்ற நபரின் பெயரில் கார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.



