நிரந்தர குடிநீர் வசதி ஏற்படுத்தி தருபவருக்கே வாக்கு மல்லிகைத்தீவு மக்கள் வேட்பாளர்களுக்கு நிபந்தனை…

வி.சுகிதாகுமார்
கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக தூய்மையான குடிநீர் வசதி இல்லாமல் பாரிய அவலங்களை எதிர்கொண்டு வருகின்ற மல்லிகைத்தீவு பிரதேச மக்கள் இதற்கான நிரந்தர தீர்வை பெற்று தருகின்ற வேட்பாளரையே வருகின்ற பொது தேர்தலில் ஆதரிப்பார்கள் என்று ஒருமனதாக தெரிவித்தார்கள்.
மல்லிகைத்தீவு பிரதேசத்தில் 70 இற்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இங்கு சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை மிக கணிசமான அளவில் அதிகரித்து வருகின்றது. அண்மைய வருடங்களில் மூவர் சிறுநீரக நோயால் உயிர் இழந்து உள்ளார்கள்.
இம்மக்கள் குடிப்பதற்காக பயன்படுத்தி வந்திருக்கின்ற நிலத்தடி நீரில் இரசாயன பொருட்கள் செறிந்து கலந்து காணப்படுவதே சிறுநீரக கோளாறுகளுக்கான காரணம் என்று துறை சார்ந்த நிபுணர்களால் கண்டு பிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சம்மாந்துறை பிரதேச சபையால் தற்காலிகமாக குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் டாக்டர் துஷித தேசப்பிரிய தலைமையிலான ஜன சஹன ஸ்ரீலங்கா ஸ்தாபனத்தின் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை மல்லிகைத்தீவுக்கு நேரில் சென்று கள விஜயம் மேற்கொண்டனர். அப்போதே இங்கு பலரும் வந்து செல்கின்றனர், தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் வருகின்றனர், ஆயினும் இது இப்போது சஜித் பிரேமதாஸவின் கோட்டை ஆகும், ஆனால் வருகின்ற வருகிற பொது தேர்தலுக்கு வாக்கு கேட்டு வருகின்ற வேட்பாளர் எவர் குடிதண்ணீருக்கான நிரந்தர வசதியை ஏற்படுத்தி தருகின்றாரோ அவரையே அனைவரும் ஒருமித்து ஆதரிப்பார்கள் என்று மல்லிகைத்தீவு மண்ணின் மக்கள் தெரிவித்தார்கள்.