நாட்டின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டில் எதிர்வரும் சில தினங்களுக்கு பலத்த காற்று மற்றும் அடை மழையுடனான சீரற்ற காலநிலை காணப்படும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், திருகோணமலை, புத்தளம், குருணாகல், அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 50 – 55 கிலோ மீற்றரை விட அதிகமாக இருக்கும்.
கடற்பரப்புக்களில் கொழும்பு தொடக்கம் மன்னார் ஊடாக புத்தளம், அம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரை காற்றின் வேகமானது மணிக்கு 50 – 60 கிலோ மீற்றராக அதிகரிக்கக் கூடும். இதன்போது குறித்த கடற்பரப்பு கொந்தளிப்பாகக் காணப்படும். இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
மேலும் மேற்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் 75 மில்லி மீற்றருக்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும். வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்யக் கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை, 2019 ஓகஸ்ட் 11ஆம் திகதி வரை வடக்கு மற்றும் மத்திய அரேபியக் கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.