சஜித் பிரதமராவதை ஜனாதிபதியும் விரும்புவார் – ஐ.தே.க நம்பிக்கை!

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பொதுக் கூட்டணி அமைத்து பொது தேர்தலில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக இன்று(வியாழக்கிழமை) இறுதி தீர்மானத்தை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
‘கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக மிகவும் காலங்கடத்தப்பட்டுள்ளது. பொதுத் தேர்தலும் நெருங்குகின்றமையால் மேலும் கலங்கடத்தப்பட்டு வருவதில் எமக்கு எந்தவித இலாபத்தையும் பெற்றுக்கொள்ள முடியாது. இதனால் இன்றைய தினக்கூட்டத்தின் போது தலைமைத்துவம் தொடர்பாக இறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
தலைமைத்துவம் தொடர்பாக நீண்ட போச்சுவார்த்தைகள் கட்சிக்குள் இடம்பெற்று வருகின்றது. இதன்போது சபாநாயகர் கரு ஜயசூரியவின் பெயரும் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இவருக்கு தலைத்துவம் வழங்குவது தொடர்பாக யாரும் இணக்கம் தெரிவிப்பதாக தெரியவில்லை. உண்மையிலே கடந்த 2015ஆம் ஆண்டே இவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருந்தால் இன்று எமது கட்சிக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
அன்றைய தினம் இவரின் பெருமையை அறிந்திராதவர்கள் இன்று அவரின் பெருமையை தெரிவித்து வருகின்றனர். ஆனால் பொதுத்தேர்தலில் பெரும்பான்மையை பெறுவதற்காக சஜித்தின் தலைமையில் போட்டியிட்டுவதே தற்போது சாதகமாக அமையும் என்று நாங்கள் கருதுகின்றோம்.
ஜனாதிபதி ஒரு கட்சியிலும், பிரதமர் வேறொரு கட்சியிலும் ஆட்சி நடத்தியதற்கான வரலாற்று சான்றுகள் எம்மிடம் இருக்கின்றது. இதனை மீண்டும் ஏற்படுத்துவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் இந்த மாற்றத்தை விரும்புவார் என்றே நாங்கள் கருதுகின்றோம். அவர்கள் கட்சிக்குள்ளும் அமைதியான முறையில் முரண்பாடுகள் இடம்பெற்று வருவதை நாங்கள் அறிவோம். இதனால் அவர் சஜித் போன்ற ஒரு நபரை பிரதமராக கொண்டு செயற்பட விரும்பலாம்.
பலமான பொது கூட்டமைப்பை அமைத்துக்கொண்டு சஜித்தின் தலைமையில் செயற்பட்டால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறமுடியும் என்று நாங்கள் கருதுகின்றோம்.
ஆனால் இதனை அவரால் மாத்திரம் நிறைவேற்ற முடியாது. கட்சியின் ஏனைய பலரும் அதற்கான ஒத்துழைப்பு பெற்றுக் கொடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.



