கபிலநிறத்தத்திகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாட்டை அட்டாளைச்சேனை உதவி விவசாய விஸ்தரிப்பு பணிப்பாளர் காரியாலய அதிகாரிகள் முன்னெடுப்பு….

வி.சுகிர்தகுமார்
வேளாண்மை செய்கையினை பெரிதும் பாதிக்கும் அறக்கொட்டி எனும் கபிலநிறத்தத்திகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாட்டை அட்டாளைச்சேனை உதவி விவசாய விஸ்தரிப்பு பணிப்பாளர் காரியாலய அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.எச்.முபாறக் தலைமையில் இன்று (10) முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கையில் அம்பாரை மாவட்ட விவசாயத்திணைக்களத்தின் கரையோரப்பிரதேச சிரேஸ்ட விவசாயப்போதனாசிரியர் ஏ.ஜ.ஏ.பெறோஸ் கலந்து கொண்டு மக்களுக்கான தெளிவூட்டல்களை வழங்கினார்.
கபில நிறத்தத்திகள் அம்பாரை மாவட்டத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில் அட்டாளைச்சேனை விவசாய விஸ்தரிப்பு நிலையத்தின் முன்பாக ஒன்றிணைந்த அதிகாரிகள் கபிலநிறத்தத்திகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் பதாதையினை ஏந்தி விழிப்புணர்வு செயற்பாட்டில் ஈடுபட்டதுடன்; துண்டுப்பிரசுரங்களையும் வழங்கினர்.
பின்னர் அட்டாளைச்சேனை சந்தைப்பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வழிப்புணர்வு செயற்பாட்டிலும் ஈடுபட்டதுடன் அங்கு குழுமியிருந்த மக்களுக்கும் கபிலநிறத்தத்தி கட்டுப்படுத்தல் தொடர்பான துண்டுப்பிரசுரங்களையும் வழங்கினர்.
அம்பாரை மாவட்டத்தில் 60ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தற்போது நிலவும் காலநிலை காரணமாக கபிலநிறத்தத்திகளின் தாக்கம் விவசாய செய்கையில் ஏற்படும்;; சந்தர்ப்பங்கள் உருவாகியுள்ளன. இந்நிலையில்; அவற்றை அடையாளம் காண்பது தொடர்பிலும் விளக்கமளித்ததுடன் அத்தாக்கத்திலிருந்து விவசாய செய்கையினை பாதுகாக்கும் முறை தொடர்பிலும் அம்பாரை மாவட்ட விவசாயத்திணைக்களத்தின் கரையோரப்பிரதேச சிரேஸ்ட விவசாயப்போதனாசிரியர் ஏ.ஜ.ஏ.பெறோஸ் விளக்கமளித்தார்.
அத்தோடு இத்தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்காக விவசாயிகள் பயன்படுத்தவேண்டிய தெரிவு செய்யப்பட்ட எப்லோட் மற்றும் ஜாவோ போன்ற களைநாசினி தொடர்பில் அட்டாளைச்சேனை விவசாய விஸ்தரிப்பு நிலைய பொறுப்பதிகாரி ஏ.எச்.முபாறக் தெளிவூட்டினார்.