எந்த அரசாங்கத்தாலும் இயலாததை நாம் செய்துள்ளோம் – ரணில்

எந்தவொரு அரசாங்கத்தினாலும் மேற்கொள்ள முடியாது போன பல செயற்பாடுகளை தற்போதைய அரசாங்கம் செய்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆரம்பத்தில் இந்த ஆட்சிக்கு நாடளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரை கொண்டு செல்ல முடியும் என்ற தீர்மானத்தின் அடிப்படையிலேயே அதனை முன்னெடுத்தாகவும் தெரிவித்தார்.
குருநாகல், மாவத்தகமவில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தெரிவிக்கையில், “இந்த ஆட்சி புதிய ஆட்சியாகும். ஆரம்பத்தில் இந்த ஆட்சிக்கு நாடளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கவில்லை. நாடாளுமன்றத்தில் கிடைக்கப்பெற்ற சிறுபான்மையை வைத்தே ஆட்சியைக் கொண்டுசெல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த ஆட்சியைக் கொண்டுசெல்ல முடியுமா என என்னிடம் வினவினார்கள். எவ்வாறாயினும் இந்த ஆட்சியை அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரை கொண்டு செல்ல முடியும் என்ற தீர்மானத்தின் அடிப்படையிலேயே அதனை முன்னெடுத்தோம்.
இவ்வாறான இக்கட்டானதொரு சூழலில் வேறு எந்த அரசாங்கத்துக்கும் இயலாத ஒன்றை நாம் செய்து அதில் வெற்றியையும் பெற்றிருக்கின்றோம்.
எமது வருமானத்தைக் காட்டிலும் செலவீனம் அதிகமாகும். இதனால் எமது ஆட்சிக்காலத்தின் முதல் இரண்டு வருடங்களில் எம்மை மக்கள் தூற்றினார்கள் என்பதை அறிந்திருந்தேன். அந்தக் காலப்பகுதியில் நாம் பொருளாதார அபிவிருத்தியில் ஓர் ஸ்த்திரத்தன்மையை ஏற்படுத்தினோம்.
அதன் காரணமாகவே தற்போது நூற்றுக்கு 50 வீதமாக காணப்பட்ட வருமானம் 100 வீதமாக அதிகரித்திருக்கிறது” என பிரதமர் கூறினார்.