இலங்கையின் 72ஆவது சுதந்திர தினம் இன்று

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 08.00 மணி முதல் பல விசேட நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

‘பாதுபாக்கான தேசம் – சௌபாக்கியமான நாடு’ என்ற தொனிப்பொருளின் கீழ் சுதந்திர தின கொண்டாட்டங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறுகின்றன.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டதன் பின்னர் இடம்பெறும் முதலாவது சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வு இதுவாகும்.
முப்படைகளின் அணிவகுப்பு மரியாதைகள், சாகச நிகழ்வுகள், கலை கலாசார நிகழ்வுகள் என்பவற்றுடன் நாட்டின் தலைவர்களின் உரைகளும் இடம்பெறுகின்றன.
சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் வெளிநாட்டு இராஜதாந்திரிகள் உட்பட 2 ஆயிரத்து 500 இற்கும் அதிகமானோர் விருந்தினர்களாக பங்கேற்கவுள்ளனர்.
இதேநேரம், பொதுமக்கள் ஆயிரம் பேரளவில் இந்த நிகழ்வை பார்வையிடவதற்கான இடவசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வில் இடம்பெறும் அணிவகுப்பு மரியாதையில் 3 ஆயிரத்து 376 இராணுவத்தினரும் 799 கடற்படையினரும் 847 வான்படையினரும் 596 பொலிஸாரும் பங்கேற்க உள்ளனர்.
பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுவிக்கப்பட்ட 1948ஆம் ஆண்டிலிருந்து இலங்கை பல்வேறுபட்ட சவால்களுக்கு முகம் கொடுத்து வருகிறது.
சிங்களவர்கள், தமிழர்கள் என இரு மொழிகள் பேசும் இந்நாட்டில் தீர்க்கப்படாத பிரச்சினையாகக் காணப்படுவது இனப்பிரச்சினையே ஆகும். இந்த இனப்பிரச்சினை தற்போது வரை தீர்வில்லாமல் தொடர்ந்துகொண்டே செல்கிறது.
ஏனெனில் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் தமிழில் தேசிய கீதம் பாடப்படாது என பொது நிர்வாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அறிவித்திருந்தமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
அத்தோடு, இந்த விடயம் தொடர்பாக தமிழ் தலைமைகளும் எதிர்ப்பு கருத்துக்களை வெளியிட்டதோடு, இந்த விடயம் தொடர்பாக ஆராயுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமும் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் தேசிய கீத விவகாரம் காரணமாக இலங்கை வாழ் தமிழர்களை சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டாமென தமிழ் கட்சிகள் தரப்பிலும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
அதேபோலவே இலங்கை சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் கடந்த போதிலும் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை அல்லது அதிகாரப் பகிர்வு வழங்கப்படாத நிலையில்,தொடர்ந்தும் அதற்காக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக கொண்டாடுமாறு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இவ்வாறு தமிழர் தரப்பில் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டாலும் இன்றைய சுதந்திர தின நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



