இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட்: எதிர்பார்ப்பு மிக்க பாகிஸ்தான் அணியில் பவாட் அலாமுக்கு வாய்ப்பு

இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும், பாகிஸ்தான் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
16பேர் கொண்ட இந்த அணியில், அனுபவ துடுப்பாட்ட வீரரான பவாட் அலாமுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் பெரிதும் அனுபவமில்லாத 34 வயதான பவாட் அலாம், இறுதியாக கடந்த 2009ஆம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார்.
இறுதியாக 2015ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியிலேயே, அவர் சர்தேச போட்டியொன்றினை சந்தித்திருந்தார். தற்போது சுமார் 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார்.
இதுவரை அவர் 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தாலும், முதற்தர போட்டிகளில் 12,000 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
இதுதவிர வேகப்பந்து வீச்சாளரான உஸ்மான் ஷின்வாரி, முதல்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவர் இதுவரை 17 ஒருநாள் மற்றும் 16 ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மேலும், வேகபந்து வீச்சாளரான இம்ரான் கான், மொஹமட் அப்பாஸ், நயீம் ஷா மற்றும் ஷாயீன் அப்ரிடி ஆகியோருக்கும் அணியில் இடம்கிடைத்துள்ளது.
அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலி, ஏற்கனவே உபாதைக் காரணமாக இத்தொடரிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.
இதேபோல, சகலதுறை வீரர் இப்தீகார் அஹமட் மற்றும் வேகபந்து வீச்சாளரான கடந்த அவுஸ்ரேலியா தொடரில் விளையாடிய மொஹமட் மூஸா கான் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
சரி தற்போது அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,
அசார் அலி தலைமையிலான அணியில், அசார் அலி, அபீட் அலி, அசாட் சபீக், பாபர் அசாம், பவாட் அலாம், ஹரிஸ் சொஹைல், இமாம் உல் ஹக், இம்ரான் கான், காஷிப் பாத்தீ, மொஹமட் அப்பாஸ், மொஹமட் ரிஸ்வான், நயீம் ஷா, ஷாயீன் ஷா அப்ரிடி, ஷான் மசூத், யாசிர் ஷா, உஸ்மான் ஷின்வாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, டிசம்பர் 11ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி, டிசம்பர் 19ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரை கராச்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அண்மையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்ரேலியா சென்ற பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகளிலுமே படுதோல்வியை சந்தித்தது. ஆகையால், 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் சிறப்பு மிக்க டெஸ்ட் தொடரில் வெற்றிபெற்றே ஆக வேண்டுமென்ற கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி உள்ளது.