இலங்கை

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல எனவும் ஆதிக் குடிகளாக தமிழர்களே இருந்தனர் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளதாகவும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர், நீதியரசர் சி.வி.விக்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திர வல்லரசுகளின் போட்டியில், சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அதிகாரப் பகிர்வு என்ற பெயரில் பிரிவினையைத் தூண்டப் பார்க்கின்றன என ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ கூறியுள்ளமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்துள்ள அவர், “ஜனாதிபதியின் தப்பான சிந்தனையின் வெளிப்பாமே இதுவாகும். ஏதோ, இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு, தமிழர்கள் வந்தேறு குடிகள், எங்கிருந்தோ வந்த அவர்கள் வடக்கு கிழக்கில் பெரும்பான்மையாக வசிப்பதால் தமக்கென நாட்டின் ஒரு பகுதியைத் துண்டாடப் பார்க்கின்றார்கள் என்பதே அவரின் கருத்து.

ஆனால், உண்மை அதுவல்ல. இலங்கை நாடானது என்றுமே தமிழ்ப் பேசும் இடங்கள், சிங்களம் பேசும் இடங்கள் என்று பிரிந்துதான் இருந்துவருகின்றது.

இப்பொழுதும் புகையிரத வண்டி மதவாச்சியைத் தாண்டியதும் தமிழர்கள் சற்று மிடுக்குடன் தமிழில் குரல் எழுப்பிப் பேசுவார்கள். அதுவரையில் பெட்டிப் பாம்பு போல் அடங்கி இருந்தவர்கள் இராணுவத்தினர் வண்டிக்குள் இருந்தால்கூட சற்றுக் குரலெழுப்பி தமிழில் பேசுவதைக் காணலாம். அதன்பொருள், தமிழ்பேசும் இடங்களை நோக்கி புகையிரதம் புறப்பட்டு விட்டது என்பதேயாகும்.

இந்த நாடு சிங்கள பௌத்த நாடல்ல. தமிழர்கள் வந்தேறு குடிகள் அல்லர். அவர்கள் இன்று நாட்டைத் துண்டாடக் கேட்கவில்லை. இலங்கையைத் துண்டாட வேண்டும் என்ற எண்ணமும் வல்லரசுகளுக்கு இல்லை. இதை கோட்டாபய ராஜபக்ஷ என்ற இளைப்பாறிய முன்னைய இராணுவ அதிகாரி புரிந்துகொள்ள வேண்டும்.

வெறுமனே, பௌத்த பிக்குகள் சிலர் கூறும் தப்பான சரித்திரத்தை முன்வைத்து தப்பான முடிவுகளுக்கு அவர் வரக்கூடாது. முழு நாட்டுக்கும், சகல மக்களுக்கும் தான் ஜனாதிபதி என்று கூறியவர் எவ்வாறு சிங்கள பௌத்த சிந்தனையில் இருந்து கொண்டு நாட்டைப் பாரபட்சமின்றி நிர்வகிக்கப் போகின்றார் என்பது முக்கியமான ஒரு கேள்வியாகும். அவரின் கூற்று தவறானது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,

“இது சிங்கள பௌத்த நாடல்ல

இலங்கையின் ஆதிக் குடிகள் தமிழ்ப் பேசியவர்களே என்பதற்குப் போதிய ஆதாரங்கள் உண்டு. பௌத்தம் இலங்கைக்கு கொண்டு வந்த போது அதனை ஏற்றவர்கள் தமிழர்கள். தேவனை நம்பிய தீசன் தமிழன். அவனின் தந்தை மூத்த சிவன் தமிழன். சிங்கள மொழி அப்போது பிறந்திருக்கவில்லை. அப்பொழுதிருந்து பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரே சிங்களம் என்ற ஒரு மொழி பரிணமித்தது. பௌத்தம் இலங்கைக்கு அறிமுகம் செய்த காலத்தில் தமிழ் மொழியில் பௌத்தக் கருத்துக்கள் கொண்ட நூல்கள் வெளிவந்தன. சிலப்பதிகாரம், மணிமேகலை இதற்குதாரணம்.

பின்னர் பெறப்பட்ட பௌத்த எச்சங்களும் தமிழர் காலத்தவையே. தமிழ் பௌத்தர்களின் காலத்து எச்சங்களே அவை. ‘தமிழ் பௌத்தர்கள்’ என்ற நூலை சிங்கள மொழியில் பேராசிரியர் சுனில் ஆரியரத்ன எழுதியுள்ளார்.

சைவர்களாக இருந்த இலங்கையின் ஆதிக் குடிகளான தமிழ் மக்கள் பலர் பௌத்தர்களாக மாறி பின்னர் காலாகாலத்தில் பௌத்தத்தைக் கைவிட்டு சைவ சமயத்திற்குத் திரும்;பவும் மாறினார்கள். அற்புதங்கள் நிகழ்த்திய நாயன்மார்களின் வருகை அதற்கு உந்து கோலாக அமைந்தது. இன்றும் பௌத்தர்கள் பலர் அற்புதம் நிகழ்த்திய சாயி பாபா போன்றவர்களைச் சார்ந்து வாழ்வதைக் காணலாம்.

முன்னர் சைவம் தழைத்தோங்கிய இந்த நாட்டில் சில காலம் பௌத்தம் கோலோச்சியது. பௌத்தம் வர முன்னரே இலங்கையை ஐந்து ஈஸ்வரங்கள் (இலிங்கங்கள்) காத்து வந்திருந்தன. கீரிமலை நகுலேஸ்வரம், மாந்தோட்டை திருக்கேதீஸ்வரம், சிலாபத்து முன்னேஸ்வரம், திருகோணமலை திருக்கோணேஸ்வரம், தேவேந்திரமுனை (னுழனெசய) தொண்டேஸ்வரம் என்ற ஐந்து இலிங்கங்கள் இலங்கைக்குக் காவல் அரண்களாக இருந்து வந்துள்ளன. ஆகவே தமிழ்ச் சைவ நாட்டில்த் தான் இன்று சிங்கள பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இலங்கையின் வடக்குக் கிழக்கில் இன்றும் சிங்கள பௌத்தர் அல்லாத தமிழ்ப் பேசும் மக்களே பெரும்பான்மையினர். எனவே முழுநாட்டையும் சிங்கள பௌத்த நாடு என்று அடையாளம் காட்டுவது மடமையின் உச்சக்கட்டம்.

தமிழர்கள் வந்தேறு குடிகள் அல்லர்
குமரிக் கண்டம் எனப்படும் லெமூரியாக் கண்டம் பற்றி ஆய்வுகள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. குமரிக் கண்டமானது தற்போதைய இலங்கையையும் உள்ளடக்கி மடகஸ்கார், அவுஸ்ரேலியா போன்ற நாடுகள் வரையில் விரிந்து இன்றைய இந்திய சமுத்திரப் பரப்பில் குடிகொண்டிருந்தது. ஏழு நாடுகளை அது உள்ளடக்கி இருந்தது. ஏழு, எலு, ஈழம் போன்ற சொற்கள் இலங்கையைக் கொண்ட அந்த நாட்டைக் குறித்தது. சரித்திர காலத்திற்கு முன் தொடக்கம் தமிழ் மொழி பேசுபவர்கள் இங்கு வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். முதற் சங்கம் (கூடல்) தென் மதுரையில் 4440 ஆண்டுகள் நிலைபெற்றிருந்தது. 89 பாண்டிய மன்னர்கள் அக் காலகட்டத்தில் ஆண்டார்கள். இறைவனார் அகப்பொருள் என்ற பின்னைய சங்க நூல் 549 புலவர்கள் அக்காலகட்டத்தில் பிரசித்தி பெற்றமை பற்றிக் கூறுகின்றது. முதற் சங்கத்தின் போது 16149 நூலாசிரியர்கள் முதற்சங்கக் கூட்டங்களில் பங்குபற்றியமை பற்றிக் கூறுகின்றது. அகஸ்தியமே அப்போதைய இலக்கண நூல். முரஞ்சியூர் முடி நாகர் என்ற யாழ்ப்பாண நாக மன்னர் முதற் சங்கத்தில் கலந்து கொண்டதாக வரலாறு உண்டு. சித்த மருத்துவம் முதற் சங்க காலத்தில் நடைமுறையில் இருந்தது. (‘தமிழர்கள் பாரம்பரியம் – சித்த வைத்தியம்’ என்ற நூலைப் பார்க்கவும்) மேலும் ரிசட் வெயிஸ் (சுiஉhயசன றுநளைள) என்பவர் 2009ம் ஆண்டில் வெளியிட்ட ‘சுநஉipநள கழச iஅஅழசவயடவைல: ஆநனiஉiநெஇ சுநடபைழைn யனெ ஊழஅஅரnவைல in ளுழரவா ஐனெயை’ (ழுஒகழசன ருniஎநசளவைல Pசநளள) என்ற நூலைப் பார்க்க.
இரண்டாவது சங்கம் 3700 ஆண்டுகள் நிலைபெற்றிருந்தது. 59 புலவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.

மூன்றாவதும் கடைச் சங்கமமுமான தமிழ்ச் சங்கம் 1850 வருடங்கள் நிலை பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. 49 புலவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.

இவை பற்றிக் கூறுவதற்குக் காரணம் குமரிக் கண்டம் பற்றிய தகவல்கள் ருசுப்படுத்தப் படும் போது குமரிக் கண்டத்துள் இலங்கை இருந்தமையும் அங்கு தமிழர்கள் வாழ்ந்து வந்ததையும் நிரூபிக்க முடியும் என்பதால்.
எனவே தமிழர்கள் வந்தேறு குடிகள் எனும் போது குமரிக் கண்டம் காலத்தில் இருந்தே தமிழ்ப் பேசும் மக்கள் இலங்கையில் வசித்து வந்தமையை நாம் மறத்தல் ஆகாது. பாண்டியர்கள், பல்லவர்கள், சோழர்கள் என்ற பலர் படையெடுத்து வந்திருந்தாலும் சரித்திர காலத்திற்கு முன்பிருந்தே தமிழ்ப் பேசும் நாகர்கள் இங்கு வாழ்ந்து வந்துள்ளார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இங்கு வாழ்ந்து வந்த ஆதித் தமிழ்க் குடிகளுடன் பின்னைய தமிழர்களும் ஐக்கியமாகி இன்றைய தமிழர்கள் இங்கு வாழ்;ந்து வருகின்றார்கள் என்பதே உண்மை.
தமிழர்கள் நாட்டைத் துண்டாடக் கேட்கவில்லை.

முப்பது வருடகாலப் போரின் பின்னர் தமிழ்ப் பேசும் மக்கள் உலக நாடுகளின் கருத்தை அறிந்த பிறகு போர்க்கால குறிக்கோள்களை விட்டு இந் நாட்டில் தமிழ்ப் பேசும் மக்கள் எவ்வாறு நீதி, நியாயம், மதிப்பு, மரியாதை போன்றவற்றின் அடிப்படையில் ஒரே நாட்டுக்குள் தொடர்ந்து வாழ முடியும் என்ற கேள்விக்குப் பதில் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தற்போது நாட்டைத் துண்டாடக் கேட்கவில்லை. ஒரே நாட்டில், நடைமுறையில் இருக்கும் வித்தியாசத்தை, வேற்றுமையை, தனித்துவத்தைப் பேணி பல் இனங்கள் ஒருமித்துப் பயணிக்க முடியுமா என்ற விடயத்தையே ஆராய்ந்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் நாட்டைத் துண்டாடக் கேட்கவில்லை என்பதை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரே நாட்டினுள் இருக்கும் வேற்றுமைகளை அனுசரித்து எப்படிப் பல் இனங்கள் பயணிக்க முடியும் என்றே கேள்வி எழுப்பிக் கொண்டு இருக்கின்றார்கள்.

நாட்டைத் துண்டாட வேண்டும் என்ற எண்ணம் வல்லரசுகளிற்கு இல்லை.

பொதுவாக நாடுகள் துண்டாடப்படுவதைச் சர்வதேச நாடுகள் எதிர்க்கின்றன. அதாவது ஒவ்வொரு சிறிய மக்கட் கூட்டமும் தாமிருக்கும் நாட்டில் தனித்துத் தமக்கென ஒரு அலகை உண்டாக்க முற்பட்டால் அது கூட்டு சேர்ந்திருக்கும் பல பெரிய வல்லரசுகளுக்குப் பாதகமாய்ப் போய்விடும். உதாரணத்திற்கு ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒவ்வொரு அலகும் தனியாக இயங்கக் கோரிக்கை விடுத்தால் என்ன நடக்கும்? அமெரிக்காவின் தற்போதைய பலம் குன்றிவிடும். இரஷ்ய நாட்டில் இதுவே நடந்தது.

ஆகவே நாடுகளைப் பலம் குன்றச் செய்வது வல்லரசுகளின் குறிக்கோள் அல்ல. நாடுகள் தமது அலகுகளின் உரிமைகளை ஏற்று ஒன்றுபட்டு ஒரே நாடாக முன்னேற வேண்டும் என்பதே அவர்கள் குறிக்கோள். அவர்களுள் பலர் இவ்வாறு பலமுடன் ஒன்று சேர்ந்து பயணிக்க சமஷ்டி அல்லது கூட்டு சமஷ்டி முறையையே தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
எவர் எது கூறினாலும் இலங்கையின் வடகிழக்கு பாரம்பரியமாகத் தமிழ்ப் பேசும் இடங்கள். அங்கு பெரும்பான்மையாகத் தமிழர்கள் 3000 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வந்துள்ளார்கள். அவர்களின் தனித்துவம் பேணப்பட வேண்டும் என்பதே தமிழர்களினதும் சர்வதேச நாடுகளினதும் எதிர்பார்ப்பாகும்.

மேற்படி கூற்றில் மேலும் ஒரு விடயத்தை நாம் அவதானிக்க முடிகிறது. வல்லரசுப் போட்டியில் அவை பிரிவினையைத் தூண்டப் பார்க்கின்றன என்று கூறும் போது வேறொரு கருத்து தொக்கி நிற்கின்றது.

அதாவது இந்தியாவும் மேற்கு நாடுகளும் தருணம் பார்த்து தமிழர்களுக்குச் சார்பாக நாட்டைப் பிரிக்கப் பார்க்கின்றார்கள் என்பதே அது.

பூனைகள் இரண்டு ஒரு ரொட்டியைப் பிரிக்க முடியாமல் குரங்கிடம் ஆலோசனை கேட்டன. ‘பிரித்துக் கொடுத்தால் போச்சு’ என்று குரங்கு பிரித்தது. பின்னர் ஒரு துண்டு சற்றுப் பெரிது என்று கூறி பெரிய துண்டின் ஒரு பகுதியைத் தான் தின்றது பின்னர் பெரிய துண்டு சிறுத்து விட்டது என்று முன்னைய சிறிய துண்டின் ஒரு பகுதியை அது தின்றது. கடைசியில் முழு ரொட்டியுமே குரங்கின் வயிற்றில் தஞ்சம் அடைந்தது.

மற்றைய நாடுகள் எம் நாட்டை பிரிக்க ஏன் கங்கணம் கட்டுகின்றார்கள்? மாண்புமிகு ஜனாதிபதி சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந் நாடு சிங்கள பௌத்த நாடு என்ற பொய்யை முன்வைத்து அரசாங்கம் நடத்தினால் கட்டாயம் அந்தப் பொய்யை சிறுபான்மையினர் உலகெங்கும் எடுத்துக் கூற வேண்டி வரும். உலக நாடுகள் தமது காரியங்களுக்காக இங்கு எட்டிப் பார்க்க நேரிடும்.

அதை விட்டு விட்டுத் தமிழர்கள் இந்த நாட்டின் ஆதிக்குடிகளே அவர்கள் வடக்கு கிழக்கில் 3000 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகின்றார்கள் என்ற உண்மையை ஏற்று தமிழர்கள் மதிப்புடனும் மாண்புடனும் சுதந்திரத்துடனும் வாழ வழி வகுத்தால் பிற நாடுகள் ஏன் எங்கள் பக்கம் தலை வைத்துப் படுக்கப் போகின்றன! அளவுக்கு மேலான செலவுகள், சீனாவின் பிடிக்குள் சிக்கியமை போன்ற பல பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு இலகுவான வழியுண்டு.

இலங்கையைக் கூட்டு சமஷ்டி நாடாக மாற்றுங்கள். இலங்கைத் தமிழர்கள், முஸ்லீம்கள், மலையகத் தமிழர்கள் யாவரையும் அணைத்து, அரவணைத்து அரசியல் செய்யுங்கள். அப்போது உலக நாடுகளில் வாழும் அத்தனை தமிழர்களும் ஏன் முஸ்லீம் நாடுகளும் இலங்கையைப் பொருளாதார ரீதியாக வாழ வைப்பார்கள். வல்லரசுகளைக் குறை கூறாமல் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் தமது பிழைகளை எடைபோட்டுப் பார்த்து எம்முடன் சமாதானம் ஏற்படுத்த முன்வரட்டும். நாட்டில் சமாதானம் நிலைக்கும். சௌஜன்யம் உருவாகும். பொருளாதார ரீதியாக மறுமலர்ச்சி உண்டாகும்” என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker