உலக சுகாதார அமைப்பிடம் மருத்துவ அதிகாரிகள் சங்கம் முக்கிய கோரிக்கை!

கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்பிடிக்கப்பட்டால் அதனை கொள்வனவு செய்யக்கூடிய நிலையில் இலங்கை தற்போது இல்லை. என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தனவந்த நாடுகள் மாத்திரம் அவற்றைக் கொள்வனவு செய்ய வாய்ப்பளிக்காது இலங்கையைப் போன்று அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கும் தடுப்பு மருந்துகள் கிடைப்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அளுத்கே இதனை வலியுறுத்தியுள்ளார்.
வர் தெரிவிக்கையில், “சர்வதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் தடுப்பூசி மற்றும் மருந்துகள் பற்றி பேசப்படுகின்றன. எனினும், அவை இன்றும் பரிசோதனை மட்டத்திலேயே காணப்படுகின்றன.
எவ்வாறிருப்பினும், இதுவரையில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எந்தவொரு மருந்தோ அல்லது தடுப்பூசியோ உலகில் இல்லை. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்தை சில நாடுகள் பயன்படுத்தத் தயாரான போதிலும் உலக சுகாதார ஸ்தாபனம் அதற்கு இன்னும் அனுமதியளிக்கவில்லை.
மேலைத்தேய மருந்தாயினும் உள்நாட்டு மருந்தாயினும் அரசாங்கம் அது தொடர்பாக மக்களுக்கு உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டும். இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்தொன்று தொடர்பாக பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. உண்மையில் இந்த மருந்து சாதகமான பிரதிபலனைத் தருமாயின் உலக நாடுகளில் இலங்கை முக்கியத்துவம் பெறும்.
கொரோனா தடுப்பூகள் தொடர்பாக நாம் தயாராவதில் எவ்வித தவறும் கிடையாது. ஆனால், உலகில் தற்போது காணப்படுகின்ற நிலைமையில் இலங்கைக்கு தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகும்.
கொரோனா தடுப்பிற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் தனவந்த நாடுகள் மாத்திரம் அதனைப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பளிக்காது இலங்கையைப் போன்று அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கும் அவற்றைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் உலக சுகாதார ஸ்தாபனம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில் ஏழு அல்லது எட்டு மணித்தியாலங்களுக்கு ஒரு கொரோனா மரணம் பதிவாகிறது. சில சந்தர்ப்பங்களில் மூன்று மணித்தியாலங்களுக்கு ஒரு மரணமும் பதிவாகியுள்ளது. எனவே, இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த கொரோனா மரணங்கள் தொடர்பாக ஆராயும் மீளாய்வுக் குழுவொன்றை நியமிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்தக்குழு, அட்டலுகம மற்றும் கொழும்பைப் போன்று அபாயமுடைய பகுதிகள் தொடர்பாக விசேட மதிப்பீட்டைச் செய்து டிசம்பர் இறுதியில் அதிகளவான மரணங்கள் பதிவாகக் கூடும் என்ற நிலைமையை மாற்றியமைக்கப் பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.