ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளில் ‘சிப்தொற’ புலமை பரிசில் வழங்கும் வேலைத்திட்டம்

வி.சுகிதாகுமார்
க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையும் சகல சமுர்த்தி பயனாளிகளின் குடும்ப மாணவர்களுக்கான ‘சிப்தொற’ புலமை பரிசில் வழங்கும் வேலைத்திட்டம் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சமுர்த்தி சமூக பாதுகாப்பு நிதியத்தின் ஊடாக 2019 -2021 ஆம் கல்வியாண்டு மாணவர்களுக்கே இப்புலமை பரிசில் தற்போது வழங்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளில் 2017 2018 2019 ஆம் ஆண்டில் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்து உயர்தரம் கல்வி கற்கும் 214 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு முதற்கட்டமாக சில மாணவர்களுக்கு நேற்று(07) வழங்கி வைக்கப்பட்டது.
சமுர்த்தி தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் கே.லவநாதன் மற்றும் இன்று நியமனத்தை பெற்று தனது முதற்கடமையினை ஆரம்பித்த உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுவாகர் கணக்காளர் கே.கேசகன், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் அருந்ததி மகேஸ்வரன், சமுர்த்தி முகாமையாளர் கே.அசோக்குமார் எம்.கண்ணதாசன் விடய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர். வி.சிவமோகன் உள்ளிட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த காலத்தில் தேசிய ரீதியில் 15000 ஆயிரம் மாணவர்கள் மாத்திரமே இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டனர்.
இதனால் சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களின் திறமை மற்றும் தகுதிகள் உள்ள மாணவர்கள் நிதி ரீதியான கஷ்டங்கள் காரணமாக உயர் கல்வியில் இருந்து விலகிச் சென்றனர்.
இதனை தவிர்க்கும் முகமாகவே அரசாங்கம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதுடன் இதனூடாக ஒரு மாணவன் மாதம் ஒன்றிற்கு ரூபா 1500 வீதம் இரண்டு வருடங்களுக்கு இப்புலமை பரிசில் மூலம் பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.