ஒமிக்ரோன் தொற்று WHO எச்சரிக்கை!


உலகம் முழுவதும் பரவி வரும் ஒமிக்ரோன் தொற்று, நினைத்து பார்த்திராத வேகத்தில் பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது.
ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்குள்ளாகி உலகின் முதல் உயிரிழப்பு இங்கிலாந்தில் நேற்று முன்தினம் பதிவாகியுள்ளது. ஒமிக்ரோன் வைரஸ் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பரவி வருகின்றன. இதுதொடர்பாக ஜெனிவாவில் உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ‘தற்போதுவரை 77 நாடுகளில் ஒமிக்ரோன் தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
ஆனால் இன்னும் சில நாடுகளிலும் கண்டுபிடிக்கப்படாமல் ஒமிக்ரோன் பரவியிருக்கலாம். இதற்கு முன்னர் கண்டறியப்பட்ட டெல்டா உட்பட எந்த உருமாற்ற வைரசும் இப்படி ஒரு வேகத்தில் பரவியதை நாங்கள் பார்க்கவில்லை. நினைத்து பார்த்திராத வேகத்தில் பரவும் ஒமிக்ரோனை சில நாடுகள் குறைத்து மதிப்பிடுகின்றன.
ஒமிக்ரோன் கடுமையான பாதிப்பை குறைந்தளவில் ஏற்படுத்தினாலும், அதிகளவில் அதாவது மீண்டும் கையாள முடியாத அளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும். தடுப்பூசியால் மட்டுமே ஒமிக்ரோனை தடுக்க முடியாது. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் போன்றவற்றை கடுமையாக பின்பற்ற வேண்டும்.
மேலும் தடுப்பூசியின் திறனை கணிசமான அளவில் ஒமிக்ரோன் குறைப்பதாக சில தடுப்பூசி நிறுவனங்கள் கண்டறிந்துள்ளது. அதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.’ என்றும் அவர் கூறியுள்ளார்.



